திருச்சியில் SDPI கட்சியின் ‘யங் டெமாக்ரட்ஸ்’ புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
திருச்சி, செப். 16 திருச்சியில் SDPI கட்சியின் ‘யங் டெமாக்ரட்ஸ்’ புதிய நிர்வாகிகள் அறிவிப்பு- இளைஞர்களை அரசியல்மயப்படுத்துவதே இதன் நோக்கம் – மாநில ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் சித்திக்
எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நாடு முழுவதும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள Young Democrats இளைஞர் அமைப்பின் திருச்சி தெற்கு மாவட்டப் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு இன்று திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ‘யங் டெமாக்ரட்ஸ்’ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் சித்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில்…
திருச்சி தெற்கு மாவட்ட ‘யங் டெமாக்ரட்ஸ்’ தலைவராக பைசல் அகமது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர்கள் என மொத்தம் 19 நபர்கள் கொண்ட மாவட்ட நிர்வாகக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 19-ல் மாநிலக் குழு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தஞ்சை மற்றும் ராமநாதபுரத்திற்கு அடுத்தபடியாக 3-வது மாவட்டமாக திருச்சியில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களைச் சரியாக அரசியல்மயப்படுத்துவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.
உயர்கல்வி நிறுவன சட்டத் திருத்தம் 2026-க் கண்டித்து ராமநாதபுரத்தில் நாளை மறுநாளும், தஞ்சாவூரில் வரும் 17-ஆம் தேதியும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
SDPI கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அறிவித்தபடி, வரவிருக்கும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு எங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளோம்.
இன்றைய Gen Z தலைமுறை இளைஞர்கள் அரசியல் ரீதியாக தங்களை அப்டேட் செய்து வைத்துள்ளனர். அவர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தில் மட்டுமே மூழ்கியிருப்பார்கள் என நினைத்த நிலையில், சமூக அக்கறையுடனும் செயலாற்றி வருவது ஆரோக்கியமான விஷயம். வருங்காலத்தில் இவர்கள் சிறந்த அரசியல் தலைவர்களாக உருவெடுப்பது காலத்தின் கட்டாயம் அதை ‘யங் டெமாக்ரட்ஸ்’ வரவேற்கிறது.
போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதற்கான மூலக்காரணம் மற்றும் பொருட்கள் எங்கிருந்து வருகின்றன என்பதை அரசுதான் கண்டறிய வேண்டும். இதற்காக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ‘யங் டெமாக்ரட்ஸ்’ இளைஞர் அணி சார்பில் விரைவில் தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும்.
என தெரிவித்தார்.