திருச்சியில் “மேஜிக்கல் எக்ஸ்பிரசன்ஸ் – 2026” ஓவியக் கண்காட்சி தொடக்கம்
திருச்சி, செப்.26 திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத் திறனை வெளிப்படுத்தும் வகையில், பதினாறாம் ஆண்டு “மேஜிக்கல் எக்ஸ்பிரசன்ஸ் – 2026” ஓவியக் கண்காட்சி செப்டம்பர் 26, 27, 28 ஆகிய மூன்று நாட்கள் திருச்சி ஹோட்டல் ரம்யாஸ் – சௌபாக்கியா குளிர்மை அரங்கில் துவங்கியது.
“செந்தமிழ்ச் செவியில் சித்திரத்தின் திரையில்” என்ற கருப்பொருளில் நடைபெறும் இக்கண்காட்சியில், தமிழின் தொன்மையான இலக்கியப் பாடல்கள் தொடங்கி இன்றைய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் வரை இடம்பெற்றுள்ள சிறப்புமிக்க வரிகளின் கருத்துகளும், உணர்வுகளும் மாணவர்களின் கற்பனைத் திறன் மூலம் ஓவியங்களாகப் படைக்கப்பட்டுள்ளன.
சங்க இலக்கியப் பாடல் வரிகள், தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இடம்பெற்றுள்ள சங்க இலக்கியக் குறிப்புகள், மகாகவி பாரதியாரின் பாடல் வரிகள், திருக்குறள் உள்ளிட்ட தமிழின் சிறப்புமிக்க இலக்கியப் பதிவுகள் இக்கண்காட்சியின் ஓவியப் படைப்புகளுக்கு உந்துசக்தியாக அமைந்துள்ளன.
தேவாரம் இடரினும் தளரினும், குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிஞ்சிரிப்பும் பாடல் ஓவியம், ஒன்றாம் பத்து ஆறாம் திருமொழி வாரண மாயிரம் சூழவ லம் செய்து பாடலின் ஓவியம், திருப்பாவை மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால், ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல் பாடல் ஓவியம், அருணகிரிநாதர் திருப்புகழ் ஏவினை நேர்வழி பாடல் ஓவியம், காளிதாசன் ஜாதம் வம்ஷே புவன விதிதே புஷ்கரா வர்த்தகானாம் மேகதூது ஓவியம், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ,
நல்லதோர் வீணை செய்தேன் ஆடுவோமே பள்ளு பாடுவோமே, நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா, பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும் விழி நான் உனக்கு, காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன் கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா, தீர்த்தக் கரையினிலே, வீணையடி நீ யெனக்கு, சிந்து நதியின்மிசை நிலவினிலே, சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே பாடல்கள் ஓவியம் என சங்க இலக்கியம் குறுந்தொகை புறநானூறு உலகப் பொதுமறை திருக்குறள் பக்தி இலக்கியங்களில் தேவாரம் திருப்பாவை திருவாய்மொழி பாசுரம் அருணகிரிநாதர் திருப்புகழ் காளிதாசனின் மேகதூது இலக்கியத்தில் சரஸ்வதி அந்தாதி குற்றால குறவஞ்சி தக்கயாகப் பரணி, காப்பியங்களில் சிலப்பதிகாரம் பாடல்கள் திரைப் படங்களில் பாடல்களாக இடம் பெற்றுள்ளன. அவற்றை ஓவியக்கண்காட்சியில் சுமார் 40 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று 156 ஓவியப் படைப்புகளை உருவாக்கியுள்ளனர். பாலேட் நைப் பெயிண்டிங், அக்ரிலிக், ஆயில் பெயிண்டிங், போஸ்டர் கலர், வாட்டர் கலர் உள்ளிட்ட பல்வேறு கலை ஊடகங்கள் மற்றும் ஓவிய நுட்பங்களைப் பயன்படுத்தி காட்சிப்படுத்தி இருந்தனர்.
முதன்மை விருந்தினராக ஓவியர் ராம. சுரேஷ் பங்கேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக சிந்து சமவெளி ஆராய்ச்சியாளர் R. பாலகிருஷ்ணன், IAS (ஓய்வு) மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் டாக்டர் சுந்தர் கணேசன் ஆகியோர்
கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
தமிழ் இலக்கியத்தின் செழுமையையும், இளம் தலைமுறையின் கற்பனை மற்றும் படைப்பாற்றலையும் ஒருங்கிணைக்கும் இக்கண்காட்சி, கலை ஆர்வலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கண்டுகளித்தனர். டிசைன் பள்ளியின் பயணம் குறித்து பொற்கொடி பேசினார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
ஓவியக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை டிசைன் ஓவியப்பள்ளி தாளாளர் மதன் மற்றும் முதல்வர் நஸ்ரத் பேகம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.