திருச்சி மாநகராட்சி ஆணையரை கண்டித்து : திமுக உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து மாமன்ற கூட்டத்தில் பங்கேற்பு
திருச்சி, செப்.29 , திருச்சி மாநகராட்சி ஆணையரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து மாமன்ற கூட்டத்தில் பங்கேற்றனர்.
திருச்சி மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள ஏ. எஸ். ஜி. லூர்துசாமி மாமன்ற கூட்டம் மண்டபத்தில் இன்று மாமன்ற சாதாரண என்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, மாநகராட்சி ஆணையர் பொன்மனி மற்றும் 65 வார்டு மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த திமுக கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த 57 ஆவது வார்டு திமுக உறுப்பினர் முத்துச்செல்வம் கூறுகையில், கடந்த 5 மாதங்களாக திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை. ஏற்கெனவே பணிகள் நடைபெற ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சி பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதியாக இருக்கக்கூடிய கழிவறை குடிநீர் உள்ளிட்ட எந்த திட்ட பணிகளையும் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. அதுமட்டுமல்லாமல் திருச்சி மாநகராட்சிக்கு புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள ஆணையர் பொன்மணி ஆய்வு மேற்கொள்ளும் போது சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினர்களுக்கு தகவல் கொடுப்பதில்லை முறையாக ஆய்வு மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாநகராட்சி கட்டிட அலுவலகத்தில் சிறீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான ரமேஷ் , அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தை பற்றி திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு எந்த விதமான தகவலும் கொடுக்காமல், மதிப்பளிக்காமல் ஆலோசனை கூட்டம் நடைபெற்று உள்ளது.
குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த துறை இருப்பதால், பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் கடந்த 5 மாதங்களாக எந்த பணியையும் செய்ய முடியாமல் பொதுமக்களிடையே ,கவுன்சிலர்கள் எதிர்ப்பை மட்டும் சந்தித்து வருகிறார்கள்.. இவற்றை கண்டிக்கும் விதமாக இன்று கருப்பு உடை அணிந்து எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கிறோம் என்று கூறினார்.
,