அம்பேத்கர் படம் அகற்றியதற்கு எதிர்ப்பு : திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் விசிக கவுன்சிலர் வெளிநடப்பு
திருச்சி, செப்.29 சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் படத்தை அகற்றியதற்கு எதிர்ப்பு; திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் விசிக கவுன்சிலர் வெளிநடப்பு.
திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் சாதாரணக் கூட்டம், மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் பொன்மணி, துணை மேயர் திவ்யா மற்றும் 65 வார்டுகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும், 17-வது வார்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படம் அகற்றியதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்.
இதற்கு திமுகவைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால், விசிக கவுன்சிலர் பிரபாகரன் மாமன்றக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
தொடர்ந்து மாநகராட்சி அலுவலக நுழைவாயிலில் நின்று, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மீண்டும் அம்பேத்கரின் திருவுருவப் படத்தை வைக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி தனது கண்டனத்தை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவுன்சிலர் பிரபாகரன் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படம் அகற்றப்பட்டு, பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்பதை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும். இந்த விவகாரத்தை கண்டித்து சென்னை மாநகராட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி, கண்டன முழக்கங்களை எழுப்பினர். அதன் தொடர்ச்சியாக, இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சாதாரண மாமன்றக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்துள்ளேன்.
தமிழ்நாடு முழுவதும் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்பேத்கரின் திருவுருவப் படத்தை அகற்றுவதற்கான காரணம் என்ன என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.