குமரன்நகர் பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

0 10
Stalin trichy visit

திருச்சி, அக்.9  வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் குமரன் நகர் பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

வெள்ளம் பாதித்த பகுதி திருச்சி வயலூர் சாலையில் உள்ள குமரன் நகர், பாரதிநகர், சீனிவாச நகர், பேங்கர்ஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இது திருச்சி நகரின் மிகப்பெரிய குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாகும்.

கடந்த 1999 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் உய்யகொண்டான் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தபோது, இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் தண்ணீரில் மூழ்கின. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர் உய்யகொண்டான் மற்றும் குடமுருட்டி வாய்க்கால்கள் பலப்படுத்தப்பட்டதை தொடர்ந்து வெள்ள பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டாலும், போதுமான வடிகால் வசதி இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்குவதும், அவை வீடுகளுக்குள் புகுவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

கடந்த ஆண்டு மழைக்காலத்தின்போது இப்பதில் தண்ணீர் தேங்கியதால் இங்குள்ள குடியிருப்புவாசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்போது மாவட்ட கலெக்டர், மாநகராட்சி மேயர், ஆணையர் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். மழைநீர் முறையாக வடிந்து செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர். இதன் ஒருபகுதியாக அங்கு காலியாக உள்ள ஒரு மைதானத்தில் நீரேற்று நிலையம் அமைத்து தண்ணீரை சேமித்து, பின்னர் மின் மோட்டார் மூலம் ஒரு பள்ளியின் பின் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

ஆனால் அவர்கள் கூறியபடி நீரேற்று நிலையம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் மழைநீர் வடிகால் வாய்க்கால்களும்தூர்வாரப்படாமல் ஆகாய தாமரைகள் படர்ந்தும், புதர் மண்டியும் உள்ளது. சில வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பிலும் உள்ளது. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரவதற்கும், நீரேற்று நிலையம் அமைப்பதற்கும் மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.