தெற்கு ரயில்வே – பி.ஏ.பி.டி இணைந்து மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்

0 22
Stalin trichy visit

திருச்சி, அக்.9    இந்தியாவின் பசுமைப் பரப்பை விரிவுபடுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்யும் இலட்சியத்தோடு செயல்படும் ‘பிளான்ட் ஏ பில்லியன் ட்ரீஸ்’ (PABT) அமைப்பு, இந்திய ரயில்வேக்கு சொந்தமான வளாகங்களில் மரக்கன்றுகளை நடுவதற்காக தெற்கு ரயில்வே உடன் கூட்டாண்மையில் இணைந்துள்ளது. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் இந்த ஒத்துழைப்பு கூட்டாண்மை செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் SSE/Works/TPJ பிரிவில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தெற்கு ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி கோட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த மரக்கன்றுகள் நடும் பணியானது, ‘ஸ்வச்சதா பக்வாடா 2026’ (தூய்மைக்கான 15 நாட்கள் செயல்திட்டம் – 2026) திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இது மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற தூய்மை ஆகியவற்றை ஆதரிப்பதற்கான ஒரு சிறந்த முன்னெடுப்பாக அமைந்தது.

ரயில் நிலையங்கள், ரயில்வே துறை பணியாளர்களுக்கான குடியிருப்பு பகுதிகள், அலுவலக வளாகங்கள் மற்றும் இரயில்வேக்கு சொந்தமான பொருத்தமான பிற இடங்களில் 1.25 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தக் கூட்டாண்மை திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. மரங்கள் நடுவதற்கு ஏற்ற இடங்களைக் கண்டறிவதிலும், இச்செயல் திட்டத்தின் முன்னேற்றத்திற்கு ஏற்ப மரக்கன்றுகளை நட்டுப் பராமரிப்பதிலும் பிஏபிடி அமைப்பு உதவுகிறது. தமிழ்நாடு முழுவதும் மரக்கன்றுகளை நட்டு அவற்றை வளர்த்துப் பராமரிக்கும் பிஏபிடி-ன் மாபெரும் சுற்றுச்சூழல் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு முக்கிய தொடக்கமாக இத்திட்டம் அமைந்துள்ளது. அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூகங்களுடன் இணைந்து, மரக்கன்றுகளை நடுதல், அவற்றை அக்கறையுடன் வளர்த்து காப்பாற்றுதல் மற்றும் நீண்டகாலப் பராமரிப்பு ஆகிய அம்சங்களை உள்ளடக்கி, நீண்டகால நிலைப்புத்தன்மை கொண்ட ஒரு இயக்கத்தை உருவாக்க பிஏபிடி அமைப்பு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பின் அணுகுமுறை மரக்கன்றுகளை நடுவதோடு நின்றுவிடாமல், அவற்றை தொடர்ந்து பராமரித்து, பாதுகாப்பான வளர்ச்சியை உறுதி செய்வது வரை தொடர்கிறது. மரக்கன்றுகள் நடுவதை ஒருமுறை செய்யும் நடவடிக்கையாக கருதாமல், ஆரோக்கியமான, தற்சார்புடைய பசுமை மண்டலங்களை உருவாக்குவதே பிஏபிடி அமைப்பின் இலக்காகும். இந்த அமைப்பின் மாபெரும் இலட்சியமானது, ஆரோக்கியமான சமூகங்களுக்கும், மேம்பட்ட பல்லுயிர் பெருக்கத்திற்கும், மிகவும் நிலையான சுற்றுச்சூழலுக்கும் பங்களிக்கக்கூடிய பசுமை வெளிகளின் வலையமைப்பை உருவாக்குவதை மையமாகக் கொண்டுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது சமூகப் பொறுப்புணர்வு சிஎஸ்ஆர் திட்டங்கள் மூலமாக மரம் நடும் பணிகள், பணியாளர்களை இப்பணியில் ஈடுபடுத்தும் திட்டங்கள் மற்றும் நீண்டகால நிலைத்தன்மைக்கான முன்னெடுப்புகளில் பங்கேற்க உதவும் ஒரு சுற்றுச்சூழல் இயக்கத்தையும் பிஏபிடி உருவாக்கி வருகிறது.

“தெற்கு ரயில்வேயுடன் இணைந்து 1.25 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் ஒரு முக்கியமான தொடக்கமாகும்; ஆனால் எங்களது இலட்சியம் இதையும் கடந்து மிகப் பெரியது. தெற்கு ரயில்வே போன்ற நிறுவனங்களுடனான கூட்டாண்மை, தனிப்பட்ட மரக்கன்றுகள் நடும் பணிகளிலிருந்து பெரிய, நிலையான பசுமை மண்டலங்களை உருவாக்குவதற்கான எங்கள் தொலைநோக்கு குறிக்கோளை முனைப்புடன் செயல்படுத்த உதவும். எங்கள் கவனம் நடப்படும் மரங்களின் எண்ணிக்கையை மட்டும் சார்ந்திருக்காது. மாறாக அவைகளை வளர்த்து, பாதுகாத்து, சுற்றியுள்ள சமூகங்கள் மற்றும் சூழல் அமைப்புகளின் ஒரு பகுதியாக மாறுவதை உறுதி செய்வதில்தான் உள்ளது. எனவே, திருச்சிராப்பள்ளியில் நடப்பட்ட 300 மரக்கன்றுகள் ஒரு மிகப் பெரிய தேசிய இயக்கத்தை முன்னெடுப்பதற்கான ஒரு சிறிய, ஆனால் அர்த்தமுள்ள படிநிலையாகும்” என்று பிஏபிடி அமைப்பின் நிறுவனர் திரு. சைலேந்திர சிவகுமார் தெரிவித்தார்.

“அக்டோபர் 2-ஆம் தேதி முதல், மரம் நடுதலை முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மைக்கான ஒரு மாத கால சிறப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம். இந்த உன்னத முயற்சிக்குத் தெற்கு ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி கோட்டத்துடன் இணைந்துள்ள ‘பிளான்ட் எ பில்லியன் ட்ரீஸ்’ (Plant a Billion Trees) அமைப்போடு கூட்டு சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்று திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் மரம் நடும் பணியைத் தொடங்கினோம். இந்த ஒரு மாத கால இயக்கத்தின் போது, ​​மொத்தம் பத்து லட்சம் (ஒரு மில்லியன்) மரங்களை நடும் இலக்குடன், மரம் நடுவதற்குப் பொருத்தமான மேலும் பல இடங்களை நாங்கள் அடையாளம் காண்போம். இந்த முயற்சி நமது சுற்றுச்சூழலை மேம்படுத்துவதிலும், பசுமையான, தூய்மையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும் என தெற்கு ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) திரு. பலக் ராம் நேகி (IRSE) தெரிவித்தார்.

2030-ஆம் ஆண்டிற்குள் ‘நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு’ என்ற இலக்கை அடையும் ரயில்வே அமைச்சகத்தின் குறிக்கோளுக்கு இணக்கமாக, சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் பெருநிறுவனங்களோடு கூட்டாண்மை பங்கையும் இந்த மரக்கன்றுகள் நடும் இத்திட்டம் எடுத்துக்காட்டுகிறது. ரயில்வேக்கு சொந்தமான இடங்களின் மேம்பாடு மற்றும் பராமரிப்புடன் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதை ஒருங்கிணைப்பதன் மூலம், பசுமைக் கட்டமைப்பை உருவாக்க இந்தத் திட்டம் முற்படுகிறது. இந்தியாவின் பசுமைப் பரப்பை மீட்டெடுக்கும் மாபெரும் இயக்கத்தின் ஒரு பகுதியாக, பெருநிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளும் கூட்டாண்மை சிறப்பாக செயல்பட முடியும் என்பதை திருச்சிராப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட இந்த முன்னெடுப்பு எடுத்துக்காட்டுகிறது.

பிளான்ட் ஏ பில்லியன் ட்ரீஸ் (PABT) என்பது மரக்கன்றுகளை நட்டுப் பாதுகாப்பதற்கும், நிலையான சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவதற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஒரு தொண்டு நிறுவனம் (NGO) ஆகும். மரக்கன்றுகளை நடுவதில் மட்டுமின்றி, அவற்றின் நீண்டகால வளர்ச்சியையும் மற்றும் நீண்டகாலம் நிலைத்து உயிர்வாழ்வதை பிழைப்பை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தும் திட்டமிட்ட மரம் நடும் பணிகளை மேற்கொள்ள, பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் PABT இயக்கம் இணைந்து செயல்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.