இடைத்தேர்தல் வெற்றி – 5 மாத நல்லாட்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரம் : அமைச்சர் ஷாஜகான்
திருச்சி, அக்.10 திருச்சியில் அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்பொழுது அவர் கூறும் போது:”கடந்த 5 மாதமாக நடைபெற்று வரும் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சிக்கு சான்றிதழ் வழங்கும் வகையில் தமிழக மக்கள் இந்த வெற்றியை தந்துள்ளனர்.
கடந்த பொதுத்தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தது. ஆனால் தற்போது மிகப்பெரிய வாக்கு சதவீதத்தை பெற்று மக்கள் ஆட்சியின் பக்கம் நிற்கிறார்கள் என்பதை இந்த முடிவு பறைசாற்றுகிறது.
வாக்களித்த பெருமக்களுக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும், தலைவர் பேராசிரியர் சார்பிலும் நன்றியையும், முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.”
முதலமைச்சர் டீக்கடைக்கு பேட்டி, டிராக்டர் ஓட்டுதல், முருங்கை பறித்தல் என இடைத்தேர்தலில் இப்படி பிரச்சாரம் செய்ததே இல்லை என ஸ்டாலின் விமர்சித்துள்ளாரே?
இடைத்தேர்தல் எப்படி நடக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. திருமங்கலம் பார்முலா என பணம் பல்லாயிரம் கோடி விளையாடும் தேர்தலாகத்தான் இடைத்தேர்தல் இருந்தது. முதல்முறையாக எந்தவித பண விநியோகமும் இல்லாமல், மக்களின் நம்பிக்கையை பெற்ற தேர்தலாக இது நடந்துள்ளது. முதலமைச்சர் மக்களை சந்திப்பதில்லை என எதிர்க்கட்சிகள் சொன்னார்கள். அதற்கு வாய்ப்பாக இந்த பிரச்சாரத்தை முதல்வர் பயன்படுத்தி முழுமையாக மக்களை சந்தித்ததன் விளைவே இந்த வெற்றி.
அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி வெற்றி பெற்றதாக எடப்பாடி கூறுகிறாரே?
அவர் கூறுவது புறந்தள்ளக்கூடியது. கடந்த பொதுத்தேர்தலிலேயே அதிமுகவை மக்கள் புறந்தள்ளினர். இந்த இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த அதிமுக தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த வருத்தத்தில் அவர் பேசுகிறார். இது மதச்சார்பற்ற சமூக நீதியை காக்கும் வெற்றிக் கூட்டணியின் கொண்டாட்ட வெற்றி.
வேட்பாளர் 31 கோடி செலவு செய்ததாக வீடியோ வந்துள்ளதே?
நவீன உலகில் AI மூலம் ஒரு வீடியோவை உருவாக்குவது சாத்தியம். பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. வேட்பாளரே அதை மறுத்துள்ளார். அந்த வீடியோ வந்த பிறகு நடந்த வாக்குப்பதிவிலும் மக்கள் 14% அதிக வாக்கு தந்துள்ளனர். புள்ளி விவரப்படி பார்த்தால், தாராபுரத்தில் கடந்த தேர்தலில் 23% வாக்கு பெற்ற தவெக தற்போது 37% பெற்றுள்ளது – 14% உயர்வு. மதுராந்தகத்தில் 31%-ல் இருந்து 40%+ ஆக – 9% உயர்வு. இது 5 மாத ஆட்சிக்கு மக்கள் தந்த நற்சான்றிதழ்.
அந்த வீடியோ AI என்றால் ஏன் புகார் அளிக்கவில்லை? போலீஸ் உங்களிடம் தானே உள்ளது?
வேட்பாளர் அதை மறுத்து பேசியுள்ளார். தேர்தல் நேரத்தில் இதுபோன்ற வீடியோக்கள் பரப்பப்படுவது வழக்கம். அதை புறந்தள்ளிவிட்டு ஆக்கப்பூர்வமான பணிகளை நோக்கி செல்வதே நல்ல அரசுக்கு அழகு.
வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளதே, அரசு மீது நம்பிக்கை குறைவா?
இல்லை. அரசு மீது நம்பிக்கை குறைவு என்றால் 23%-ல் இருந்து 37%-ஆக வாக்கு எப்படி உயரும்? ஒட்டுமொத்த வாக்குப்பதிவில் சிறு சரிவு என்பது இடைத்தேர்தலில் இயல்பானது.
கம்யூனிஸ்ட் கட்சி போல நிபந்தனையற்ற ஆதரவு என்றீர்கள், ஆனால் நீங்கள் மட்டும் அமைச்சரவையில் இருக்கிறீர்களே?
மே 9-ஆம் தேதி நிபந்தனையற்ற, வெளியிலிருந்து ஆதரவு என்றுதான் முடிவெடுத்தோம். மே 10-ல் முதல்வர் பதவியேற்ற 10 நாட்களுக்கு பிறகு, மே 20-ல் தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பத்திரிகையாளர்களை சந்தித்து, முஸ்லிம் லீக் அவசியம் அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதன் பிறகு தலைவர் தலைமையில் உயர்மட்டக்குழு கூடி, சமுதாய தேவைகளை பூர்த்தி செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் அமைச்சரவையில் பங்கேற்றோம். இது மதச்சார்பற்ற சமூக நீதி, மாநில சுயாட்சி காக்கும் அரசு என்பதால் இந்த உறவு பாசத்தோடு தொடர்கிறது.
பாமக இந்த கூட்டணியில் இணைந்தால்?
கூட்டணியில் யார் இருக்க வேண்டும், வேண்டாம் என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் கூட்டணி தலைவரான முதலமைச்சருக்குதான் உள்ளது. நாங்கள் கடந்த 12 ஆண்டுகளாக திமுகவோடு உள்ளன்போடு பயணித்தது போல, இப்போதும் உள்ளன்போடு இந்த கூட்டணியில் பயணிக்கிறோம் என்றார்