மணப்பாறை அருகே கல்குவாரியை அகற்றக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியோறும் போராட்டம்
திருச்சி, அக்.28 மணப்பாறை அருகே கல்குவாரியை அகற்றக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியோறும் போராட்டம். ஆடு, மாடுகளுடன், சட்டி, பானைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி, பெரிய மலை அடிவாரத்தில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியால், நிலத்தடி நீர்மட்டம் முழுவதுமாக குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இருக்கும் நீரை நம்பி பயிரிட்ட வேளான் பயிர்களும் போதிய விளைச்சல் தருவதில்லை. கல்குவாரியில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்களால் அருகில் 100 மீட்டரில் உள்ள குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளி கட்டிடங்களில் பலத்த அதிர்வுகள் ஏற்படுவதால் அதன் உறுதித்தன்மையை இழந்து வருகின்றன. அதேபோல் கல்குவாரியில் இருந்து 10 மீட்டர் இடைவெளியில் வனப்பகுதி இருப்பதால் வனவிலங்குகளும் கல்குவாரியால் பாதிப்படைகின்றன.
பொதுமக்கள். குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள், வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாத்திட வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட கல்குவாரியை நிரந்தரமாக மூடிடவும், அதன் உரிமத்தை ரத்து செய்யக்கோரியும் இன்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தமிழர் தேசம் கட்சியினர் மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக கல்லுப்பட்டி மாரியம்மன் கோவில் திடலில் இருந்து ஆடு, மாடுகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்றனர். ஆனால் வட்டாட்சியர் அலுவலகத்தின் நுழைவாயில் கேட் பூட்டப்பட்டு போலீசாரால் தடுப்புகள் அமைத்து போராட்டம் நடத்த வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து போராட்டக்காரர்கள் அங்கேயே அமர்ந்து அடுப்பு, விறகு, குடங்கள், சட்டி, பானைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்து நிரந்தமாக மூடக்கோரி முழக்கங்கள் எழுப்பினர். இதில் தமிழர் தேசம் கட்சியினருடன் நாம் தமிழர் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்து நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்ட தொடர்போராட்டத்தை முன்னெடுப்போம் என தெரிவித்துள்ளனர்.