துணை சபாநாயகர் தாக்கிய விவகாரம் : பாதிக்கப்பட்டவர் சரமாரி புகார்

0 18
Stalin trichy visit

திருச்சி, நவ.9 துணை சபாநாயகர் தாக்கியதில் காயமடைந்த நபர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி – கட்டாயப்படுத்தி வீடியோ எடுத்ததாக பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு.

திருச்சி மாவட்டம் துறையூர் கண்ணபிரான் காலனியை சேர்ந்த கார்த்திக் குமார் என்பவர், தன் பகுதியில் உள்ள அடிப்படை வசதிக்குறைபாடுகள் குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தீபாவளி நாளான நேற்று மாலை அவசர வேலை காரணமாக மண்ணச்சநல்லூர் பகுதிக்கு வந்த கார்த்திக் குமார், அங்கு நின்றுகொண்டிருந்த துணை சபாநாயகர் ரவிசங்கரின் காரைப் பார்த்துவிட்டு தன் பகுதி பிரச்சனைகளை முறையிட சென்றுள்ளார்.
அப்போது காரில் இருந்து இறங்கி வந்த துணை சபாநாயகர் ரவிசங்கர், கார்த்திக் குமாரை தகாத வார்த்தைகளால் பேசி, சரமாரியாக தாக்கி எட்டி உதைத்து விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, காயமடைந்த கார்த்திக் குமார் சமயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, இன்று காலை சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது. அதில், துணை சபாநாயகர் ரவிசங்கர் அருகில் அமர்ந்தவாறு பேசும் கார்த்திக் குமார், தன்னை துணை சபாநாயகர் தாக்கவில்லை என்றும், கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு மட்டுமே ஏற்பட்டது என்றும், சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், அடுத்த சிறிது நேரத்திலேயே கார்த்திக் குமார் மற்றொரு வீடியோவை வெளியிட்டார். அதில், துணை சபாநாயகரும் சமயபுரம் காவல் ஆய்வாளர் கிருபாநிதியும் தன்னை கொன்றுவிடுவதாக மிரட்டி அந்த முதல் வீடியோவைப் பதிவு செய்ததாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான கார்த்திக் குமார், மேலதிக சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சேர்ந்த பின் செய்தியாளர்களிடம் கூறியது:-

நகராட்சியிலும் சட்டமன்ற அலுவலகத்திலும் முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால் தான் துணை சபாநாயகரிடம் நேரடியாகக் கோரிக்கை வைக்கச் சென்றேன். ஆனால், அவர் என்னை மிகக் கொடூரமாகத் தாக்கிவிட்டார். அதன் பிறகு, மண்ணச்சநல்லூர் ஆய்வாளர் கிருபாநிதி என்னை வலுக்கட்டாயமாக துணை சபாநாயகர் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு துணை சபாநாயகரும் ஆய்வாளரும் இணைந்து நாங்கள் சொல்வது போல் பேசவில்லை என்றால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொன்றுவிடுவோம் என மிரட்டினர். அவர்கள் எழுதி கொடுத்த வசனங்களை பேச வைத்து அந்த வீடியோவை பதிவு செய்தனர். எனது உயிரையும் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ளவே வேறு வழியின்றி பயந்து அவ்வாறு பேசினேன். நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்.

தொகுதி பிரச்சனையை கூற சென்றவரை துணை சபாநாயகர் ரவிசங்கர், தாக்கிய சம்பவமும்,  அடுத்தடுத்து  வீடியோ வெளியானதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.