துணை சபாநாயகர் தாக்கிய விவகாரம் : பாதிக்கப்பட்டவர் சரமாரி புகார்
திருச்சி, நவ.9 திருச்சி மாவட்டம் துறையூர் நகரில் குடிநீர் பிரச்சினை மற்றும் குப்பைகள் தேங்கி கிடந்தது தொடர்பாக துறையூர் கண்ணபிரான் காலனியைச் சேர்ந்த கார்த்திக் குமார் என்பவர், துறையூர் சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை துணை சபாநாயகருமான ரவிசங்கரை நேரில் சந்தித்து புகார் கொடுக்க சென்றுள்ளார். அவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் சரமாரியாக தாக்கிய வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகியது.
அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட கார்த்திக் குமார் “நான் தளபதிக்கு தான் வாக்களித்தேன்” என்று கூறும் போதும் நபர் ஒருவர் அவரை கடுமையாக தாக்கும் வீடியோ வைரல் ஆனது. தளபதி விஜய் என்று முதல்வர் விஜய் பெயரை பலமுறை கூறியபோதும் அதையும் பொருட்படுத்தாமல் சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் கார்த்திக் குமாரை விரட்டியடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு வீடியோ வெளியானது. அதில் குறை சொல்ல வந்த நபர், துணை சபாநாயகர் ரவிசங்கர் அருகில் அமர்ந்தபடி ஒரு வீடியோ வெளியானது. அதில் கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை சமூக ஊடகங்களில் தவறாக சித்தரித்து வெளியிட்டதாகவும், ஒரே கட்சிக்குள் ஒன்றாக சேர்ந்து பயணித்து வருவதாகவும் பேசியிருந்தார்.
இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் கார்த்திக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், துணை சபாநாயகர் ரவிசங்கரை சந்தித்து கோரிக்கை வைப்பதற்கான சென்றேன். ஆனால் அவர் என்னை தகாத வார்த்தையால் திட்டி தாக்கினார். இதனால் பாதிக்கப்பட்ட நான் மண்ணச்சநல்லூர் புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றேன். அப்போது மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் கிருபாநிதி தன்னை மிரட்டி துணை சபாநாயகர் ரவிசங்கர் வீட்டிற்கு அழைத்துச் சென்று மிரட்டியதுடன் நாங்கள் சொல்வது போல்தான் பேச வேண்டும் என்று வீடியோ எடுத்து வெளியிட்டதாகவும் கூறினார்.
தொகுதி பிரச்சனையை கூற சென்றவரை துணை சபாநாயகர் ரவிசங்கர், தாக்கிய சம்பவமும், அடுத்தடுத்து வீடியோ வெளியானதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.