“நேருவின் ஜனநாயக மரபுகளைப் பாதுகாப்போம்”- வாக்குரிமையைப் பறிக்க விடமாட்டோம் : பீட்டர் அல்போன்ஸ் பேட்டி
திருச்சி, நவ.14 இந்தியாவின் முதல் பிரதமரும், நவீன இந்தியாவின் சிற்பியுமான பண்டித ஜவஹர்லால் நேருவின் 137-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மண்டல மறுசீரமைப்புக் குழுத் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டு நேருவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
இந்தியாவில் ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு. சாதி, மதம், இனம், மொழி, பாலினம், ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் வாக்குரிமை வழங்கி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உருவெடுக்க அடித்தளமிட்டவர் நேரு.
ஆனால், இன்று நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், சுதந்திரமான ஊடகங்கள், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது விமர்சனம் எழுப்பினார். நேரு உருவாக்கிய ஜனநாயக மரபுகளையும், மக்களின் வாக்குரிமையையும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாதுகாக்கும். வாக்குகளைத் திருடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் தொடர்பான அரசியல் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் பேசிய கருத்துகளுக்கு பிரதமர் எதிர்ப்பு தெரிவிக்காதது, தமிழக நலனுக்கு எதிரான நிலைப்பாட்டை பிரதமர் மறைமுகமாக ஆதரிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறினார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த விமர்சனங்கள் தொடர்பாக பேசிய அவர், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து குற்றச் சம்பவங்களின் நிலவரத்தை மதிப்பிட வேண்டும். பல ஆண்டுகளாக நிலவி வரும் பிரச்சினைகளை மூன்று மாதங்களில் முழுமையாகச் சரிசெய்துவிட முடியாது. காவல்துறை நிர்வாகத்தைச் சீரமைக்க கால அவகாசம் தேவை. முதலமைச்சர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்றார்.
தமிழக நூலகங்களில் 75 ஆயிரம் புத்தகங்கள் ஆபாச நூல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் குறித்துப் பேசிய அவர், அந்த நூல்கள் எவ்வாறு நூலகங்களுக்குள் கொண்டுவரப்பட்டன, அவற்றைத் தேர்வு செய்தது யார், அதற்கு அனுமதி வழங்கியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட குழுவின் தலைவரான பேராசிரியர் ஜெயரஞ்சன் விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், தமிழகத்தில் அரசு நிர்வாகத்தில் மாற்றங்கள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், அரசு கல்லூரிகளில் 112 முதல்வர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் கோரிக்கைகள் தாமதமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதுபோன்ற நிர்வாக மாற்றங்களை பொதுமக்கள் வரவேற்க வேண்டும் என்றார்.
ஆளுங்கட்சியினர் மீதான புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, யார் தவறு செய்திருந்தாலும் உரிய விசாரணை நடத்தப்பட்டு ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முறையான புகார்களும், ஆதாரங்களும் கிடைத்த பின்னரே சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
மேலும், தற்போதைய ஆட்சிக்கு நிர்வாகத்தைச் சீரமைக்க போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். மூன்று மாதங்களுக்குள் அனைத்து மாற்றங்களும் நிகழ்ந்துவிடும் என எதிர்பார்ப்பது சரியானதல்ல. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அரசுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதங்கள் நடைபெறும்போது அதுகுறித்த அரசியல் நிலைப்பாடுகள் வெளிப்படும் என்றும் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.