பணி நிரந்தரம் செய்ய வேண்டும் : சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் கோரிக்கை
திருச்சி,நவ.14 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழ்நாடு மாநில நோய் தடுப்பு சுகாதார ஆய்வாளர் நல சங்கத்தின் மாநில முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார ஆய்வாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 2020 ஆண்டில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் சுகாதார ஆய்வாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக தேர்தல் வாக்குறுதியாக தவெக அறிவித்திருந்த நிலையில் அதனை தற்போது நிறைவேற்றுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும். 2020 ஆண்டு முதல் கொரோனா மற்றும் என்.ஹெச்.எம் திட்டத்தில் பணிபுரிபவர்களின் பணி மூப்பு பட்டியலை வெளியிட வேண்டும். அவர்களுக்கு ஊதிய உயர்வும் நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும். பயணப்படி, மருத்துவ மற்றும் விபத்து காப்பீடு திட்டத்தை என்.ஹெச்.எம் திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர்களுக்கு மாத இறுதி தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் . காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பண்டிகைக்கால முன்பணம் வழங்க வேண்டும். வருடாந்திர ஊதிய உயர்வை 5 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 15 கோரிஅம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.