உலக GIS தினத்தை முன்னிட்டு செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்பு குறித்து இணையவழிக் கருத்தரங்கம்

0 54
Stalin trichy visit

திருச்சி, நவ. 20  உலக GIS தினம் 2026: GPS மற்றும் NavIC செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்பு குறித்த இணையவழிக் கருத்தரங்கம் – 372 பேர் பங்கேற்பு!

உலக GIS தினம் 2026-ஐ முன்னிட்டு, தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சங்கம் (Tamilnadu Astronomy & Science Society – TASS) மற்றும் புத்தனாம்பட்டி, நேரு நினைவு தன்னாட்சிக் கல்லூரி இணைந்து, ராமன் ஆராய்ச்சி அறக்கட்டளை, அறிவியல் பலகை மற்றும் எய்ட் இந்தியா ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இணையவழிக் கருத்தரங்கை நடத்தின.

நவம்பர் 19 அன்று மாலை 7.00 மணி முதல் 8.15 மணி வரை நடைபெற்ற இக்கருத்தரங்கில், பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) ISTRAC மையத்தைச் சேர்ந்த திருமதி நிர்மலா சிறப்பு உரையாற்றினார். “World GIS Day 2026 – GPS and the NavIC System” என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். இந்நிகழ்வில் 372 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

உலகளாவிய செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்பு (GNSS), செயற்கைக்கோள்கள் மூலம் இருப்பிடம் கண்டறிதல், வழிகாட்டுதல் மற்றும் நேரக் கணக்கீடு (Positioning, Navigation and Timing – PNT) ஆகியவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அவர் விளக்கினார். குறிப்பாக, பல செயற்கைக்கோள்களிலிருந்து பெறப்படும் சமிக்ஞைகளைப் பயன்படுத்தி இருப்பிடத்தைக் கண்டறியும் Trilateration தொழில்நுட்பம், செயற்கைக்கோள்களில் பயன்படுத்தப்படும் துல்லியமான அணுக் கடிகாரங்கள், நேர ஒத்திசைவு மற்றும் இந்தியாவின் உள்நாட்டு வழிகாட்டி அமைப்பான NavIC ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும், இந்திய பிராந்திய வழிகாட்டி செயற்கைக்கோள் அமைப்பின் (IRNSS) நேர ஒத்திசைவு தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியத்துவம் பெறவுள்ள நிலவுக்கான GNSS (Moon GNSS) மற்றும் Lunar Augmented Navigation Service (LANS) ஆகியவை குறித்தும் விளக்கினார். எதிர்கால நிலவு ஆய்வுப் பயணங்களில் செயற்கைக்கோள் வழிகாட்டி தொழில்நுட்பத்தின் தேவைகள் மற்றும் சர்வதேச விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

இக்கருத்தரங்கம் மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்களுக்கு GPS, NavIC, GIS மற்றும் விண்வெளித் தொழில்நுட்பங்கள் குறித்த புதிய அறிவையும் புரிதலையும் வழங்கியது.

சிறப்புரையாற்றிய  நிர்மலா , நிகழ்ச்சியைச் சிறப்பாக ஒருங்கிணைக்க ஒத்துழைப்பு வழங்கிய தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சங்கம் (TASS), நேரு நினைவு தன்னாட்சிக் கல்லூரி, ராமன் ஆராய்ச்சி அறக்கட்டளை, அறிவியல் பலகை மற்றும் எய்ட் இந்தியா ஆகிய அமைப்புகளுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.