திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.500 கோடி மதிப்பிலான நிலங்களைப் போலிப் பத்திரங்கள் மூலம் அபகரித்ததாக புகார்
திருச்சி, நவ.20 தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறையில் அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில் (தாருகாவனேஸ்வரர் கோயில்) அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நிலங்களில் ஒரு பகுதி சட்டவிரோதமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றொரு பகுதி நிலங்கள் கடந்த 84 ஆண்டுகளாக வாடகை செலுத்தப்படாமல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களுக்கு உரிய வாடகையைச் சட்டப்படி வசூலித்தால், கோயிலுக்கு ரூ.50 கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளைப் பாதுகாத்து மீட்டெடுக்க வேண்டும்; கோயில் சொத்துகளிலிருந்து கிடைக்க வேண்டிய வருமானத்தை அறக்கட்டளை என்ற பெயரில் தனிநபர்கள் முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி கே தங்கராஜ் , உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுதாகர் நாகராஜ் (Sudhagar Nagaraj) மூலமாக, சுமார் 600 பக்கங்கள் கொண்ட ஆவணங்களுடன் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்தப் பொதுநல வழக்கு இன்று (20.11.2026) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதியரசர்கள் பி. வேல்முருகன் மற்றும் கே. கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கில் மனுதாரர் தரப்பில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுதாகர் நாகராஜ் ஆஜராகி வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படும் கோயில் சொத்துகளை விற்பனை செய்யவும், வாங்கவும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், கோயில் நிலங்களை ஆக்கிரமித்தது மற்றும் போலிப் பத்திரங்கள் மூலம் கோயில் நிலங்களின் உரிமையை மோசடியாக அபகரித்ததாகக் கூறப்படும் ‘தபோவனம்’ அறக்கட்டளை தொடர்பான புகார்கள் குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயில் சொத்துகள் இறைவனுக்குச் சொந்தமானவை; அவற்றைப் பாதுகாப்பது சம்பந்தப்பட்ட அறநிலையத்துறையின் சட்டப்பூர்வக் கடமையாகும். கோயில் சொத்துகள் மீட்கப்படுவதற்கும், அவற்றின் வருமானம் முறையாகக் கோயிலின் நலனுக்குப் பயன்படுத்தப்படுவதற்கும் இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.