மலேசியாவில் உயிரிழந்த இளைஞரின் உடலை தாயகம் கொண்டுவர உதவிய மணப்பாறை எம்.எல்.ஏ. கதிரவன்
திருச்சி,நவ. 21 திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருப்பூர் ஊராட்சியைச் சேர்ந்த துரைமுருகன் என்பவர் மலேசியாவில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அவரது மரணச் செய்தி குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
உயிரிழந்த துரைமுருகனின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அவரது குடும்பத்தினருக்கு இக்கட்டான சூழ்நிலையில் உதவிக்கரம் நீட்டவும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன் முன்வந்தார்.
குடும்பத்தினர் மலேசியா சென்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழந்தவரின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கு உதவும் வகையில், தனது சொந்த நிதியிலிருந்து குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் திருச்சியிலிருந்து மலேசியா சென்று வருவதற்கான விமானப் பயணச் சீட்டுகளை ஏற்பாடு செய்து வழங்கினார். மேலும், அவர்கள் மலேசியாவில் தங்குவதற்கான ஹோட்டல் வசதிகளையும் முன்பதிவு செய்து கொடுத்து உதவினார்.
வெளிநாட்டில் குடும்ப உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தால், அவரது உடலை தாயகம் கொண்டு வருவதற்கான நடைமுறைகளை மேற்கொள்வது மட்டுமின்றி, பயணச் செலவுகள் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களையும் குடும்பத்தினர் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இத்தகைய துயரமான சூழ்நிலையில், குடும்பத்தினருக்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன் மேற்கொண்ட உதவி, அவர்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.
மேலும், துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து செய்து தருவதாகவும், இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்குத் துணையாக நிற்பதாகவும் சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன் உறுதியளித்தார்.
துயரத்தில் தவிக்கும் குடும்பத்திற்கு மனிதநேய அடிப்படையில் உதவிக்கரம் நீட்டிய மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரின் இந்த நடவடிக்கை, அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.