மணப்பாறை அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியை தாக்கியதாக +2 மாணவி மருத்துவமனையில் அனுமதி
திருச்சி, நவ.25 மணப்பாறை அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியை தாக்கியதாக +2 மாணவி மருத்துவமனையில் அனுமதி.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆமணக்கம்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் 12 ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் இன்று காலை வழிபாட்டு கூட்டத்தின் போது தவறு செய்ததாக கூறப்படுகிறது. வழிபாட்டுக் கூட்டம் நிறைவடைந்த பின் பள்ளியின் தலைமை ஆசிரியை மகேஷ்வரி மாணவியை அழைத்து கண்டித்ததாகவும், அப்போது மாணவியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இடது பக்க கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட மாணவி மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் மாணவி தாக்கப்பட்டது தொடர்பாக மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாணவியை தாக்கிய தலைமை ஆசிரியை அரசு மருத்துவ மனைக்கு சென்று மாணவியை சமாதானம் செய்ய முயற்சியில் ஈடுப்ட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.