நபார்டு வங்கியின் சார்பில் 2022-23-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் சிவராசு வெளியிட்டார்

0 501
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நபார்டு வங்கியின் சார்பில் 2022-23-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் சிவராசு நேற்று வெளியிட்டு பேசியதாவது:-
தமிழகத்தின் ஊரக மற்றும் வேளாண் வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் நபார்டு வங்கி, திருச்சி மாவட்டத்தில் கிடைக்க பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் ரூ.11 ஆயிரத்து 814 கோடியே 38 லட்சம் அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது. விவசாயத்தில் நீண்ட காலக்கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை இந்த திட்டம் விளக்குவதாக உள்ளது.

இதுபோன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி, விவசாயத்தை ஒரு லாபகரமான வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும். வேளாண்மையில் இயந்திரமயமாக்கல், சொட்டு மற்றும் தெளிப்பு நீர்ப்பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும்.

வங்கிகள் மேலும் இதுபோன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இக்கடன் திட்ட அறிக்கை, பல அரசுத்துறைகள், வங்கிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளிவிவர ஆலோசனை அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் அரசின் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு இந்த வளம் சார்ந்த கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள முள்ளிப்பாடி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், அகத்தியர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் முசிறி வட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்களுக்கு நாப்கிசான் (நபார்டு துணை நிறுவனம்) மூலம் மொத்தம் ரூ.32 லட்சம் கடன்களை மாவட்ட கலெக்டர் சிவராசு வழங்கினார்.
திருச்சி மாவட்டம் நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்டம் துறைவாரியான மொத்த விவசாய கடன், குறு, சிறு நடுத்தர தொழில்கள் கடன், ஏற்றுமதிக்கடன், வீட்டுவசதி, மரபுசாரா எரிசக்தி உள்பட மொத்த முன்னுரிமை துறைகளுக்கான கடன் ரூ.11 ஆயிரத்து 814 கோடியே 38 லட்சம் ஆகும்.
இந்தநிகழ்ச்சியில் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் மோகன்கார்த்திக், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் வேலாயுதம் மற்றும் வங்கிகள் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.