கரும்பு பயிரில் ஏற்படும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
திருச்சி மாவட்டத்தில் லால்குடி, முசிறி, தொட்டியம், புள்ளம்பாடி ஆகிய வட்டாரங்களில் சுமார் 2500 ஹெக்டர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது நிலவும் சீதோஷ்ன நிலை மற்றும் பருவகால மாறுதல் காரணமாக கரும்பு பயிரில் மாவு பூச்சி மற்றும் பொக்கா போயங் என்ற குறுத்து முறுக்கல் பூஞ்சாண நோய் தாக்குதல் சில இடங்களில் தென்படுகிறது. மேலும் இலைகளை அகற்றிப்பார்த்தால், கரும்போடு இணைந்த இலையுறைகளையும், கரும்பின் கணுப்பகுதிகளிலும் வௌ்ளை நிறமாவு கலந்த பூச்சிகள் தென்படும். கரும்புகளில் எரும்பின் நடமாட்டம் தெரியும். கரும்பின் இலைக்குருத்து வளர்ச்சியின்றி அடுக்காகவும் முறுக்கலாகவும் காட்சி தரும். நுனிக்குறுத்துப்பகுதி வளைந்து நெளிந்தும், தோகைகள் சிறுத்தும் காணப்படும்.
இதனை ஆரம்ப காலத்திலேயே கட்டுப்படுத்த ஏக்கருக்கு குளோரிபைரிபாஸ், வேப்ப எண்ணெய் கரைசல், காப்பர் ஆக்ஸிகுளோரைடு தகுந்த அளவோடு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கரும்பின் இலையுறை மற்றும் தண்டுப்பகுதி நன்கு நனையும்படி தெளிக்கவும். 15 நாட்கள் பின் 2-வது தெளிப்பாக கரும்பில் தோகை உரித்த பின்னர் ஏக்கருக்கு டைமெத்தோயட் , மீன் எண்ணை சோப்பு திரவம் தகுந்த அளவோடு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கரும்பின் தண்டுப்பகுதி முதல் வேர் வரை நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.
மேலும், விவசவாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரும்பு பயிருக்கு நாளை ஏக்கருக்கு ரூ.2 ஆயிரத்து 650 தவனை செலுத்திட கால அவகாசம் உள்ளது. இதே போல் சிறப்பு பருவத்தில் நெல் பயிருக்கு ரூ.537-ம், பருத்தி பயிருக்கு ரூ.585.87-ம் செலுத்தலாம். பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் வருகிற 15-ந்தேதி. மக்காச்சோளப் பயிருக்கு ரூ.373.50-ம் மற்றும் வெங்காயப் பயிருக்கு ரூ.1977.51-ம் செலுத்தி பயிர்காப்பீடு செய்ய வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். இதனை அனைத்து விவசாயிகளும் கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.