திருச்சியில் 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்தன; போலீஸ் கமிஷனர் நேரில் ஆய்வு

0 449
Stalin trichy visit

திருச்சி மாநகரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், பயணிகளின் நலன் கருதியும் 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, சோனா மீனா தியேட்டர் எதிரில் உள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
இதுபோல் மன்னார்புரத்தில் உள்ள இலுப்பூர் சாலையில் உள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பஸ்களும், மன்னார்புரம் சர்வீஸ் சாலையில் உள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்நிலையங்கள் வருகிற 7-ந் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்.

தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து திருச்சி மாநகர் வழியாக சென்னை செல்லும் அரசு பஸ்கள் மன்னார்புரம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி மன்னார்புரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்லும்.
மற்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்களின் வழித்தடங்களில் எந்தவித மாற்றமுமின்றி வழக்கம்போல மத்திய பஸ் நிலையத்திலிருந்து புறப்படும். மத்திய பஸ் நிலையத்திலிருந்து மன்னார்புரம் தற்காலிக பஸ் நிலையத்திற்கு சுற்றுப்பேருந்துகள் இயக்கவும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த பஸ்நிலையங்கள் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தன. உதவி போலீஸ் கமிஷனர் அஜய்தங்கம், முருகேசன் ஆகியோர் கொடியசைத்து தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து பஸ்களை வழியனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் தற்காலிக பஸ் நிலையத்தை மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உதவி போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் கூறியதாவது:-

தேசிய நெடுஞ்சாலையில் எக்காரணத்தை கொண்டும் எவ்வித வாகனங்களையும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக்கூடாது. பஸ்களை அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றவேண்டும். போக்குவரத்து சிக்னல்களில் பயணிகளை இறக்கி, ஏற்றக்கூடாது.
வேன்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் நிறுத்தவேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலையோரங்களிலும்; நிறுத்தக்கூடாது. வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து விற்பனை செய்யக்கூடாது.

பட்டாசு வியாபாரம் செய்பவர்கள் அனுமதி பெற்ற இடத்தில் மட்டும்தான் விற்பனை செய்ய வேண்டும். தரைக்கடை மற்றும் தள்ளுவண்டியில் வைத்து பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. மேற்படி விதிகளை மீறுவோர்மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிக பஸ்நிலையங்களில் பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படாவண்ணம் தகுந்த காவல்துறையின் பாதுகாப்பும், மாநகராட்சி மூலம் நிழற்குடை, குடிநீர், பொதுக் கழிப்பிடவசதி, ஒலிபெருக்கி மூலம் தகவல்களை தெரிவித்தல் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு காவல்துறை உதவி தேவைப்பட்டாலோ, அல்லது ஏதாவது விதிமீறல் நடந்தாலோ அது பற்றிய தகவலை காவல் கட்டுப்பாட்டு அறை எண்.100-க்கும் மற்றும் மாநகர காவல் அலுவலக வாட்ஸ்ஆப் எண் 96262-73399-க்கும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு போலீஸ் கமிஷனர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.