அண்ணாமலையின் புதிய இயக்கம் யாருக்காக, யாருடைய பினாமியாக தொடங்கப்படுகிறது : திருச்சியில் முத்தரசன் பேட்டி

0 18
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 5  அண்ணாமலை புதிய இயக்கம் – யார் வேண்டுமானாலும் அமைப்பு, அரசியல் கட்சிகளை தொடங்கலாம்; ஆனால், அது யாருக்காகத் தொடங்கப்படுகிறது, யாருடைய பினாமியாக தொடங்கப்படுகிறது என்பது போகப் போகத்தான் தெரியும் – திருச்சியில் முத்தரசன் பேட்டி!

திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகக் குழு, மாவட்டத் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்ற விரிவான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான இரா.முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:–

கிராமப்புறங்களில் உள்ள நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்குப் பெரும் பயனளிக்கும் வகையில், ஐக்கிய முன்னணி ஆட்சி காலத்தில் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்’ கொண்டு வரப்பட்டு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. ஆனால், நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, இத்திட்டத்தைச் சீர்குலைக்கப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் உச்சகட்டமாக, தற்போது இத்திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரையே நீக்கிவிட்டு, ஜி-ராம்ஜி எனப் புதிய பெயரைச் சூட்டியுள்ளனர்.

இத்திட்டத்தைச் செயல்படுத்தும் முறையையும் முற்றிலுமாக மாற்றி, வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்குக் கொண்டு வர ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ₹9,95,692 கோடி ஆகும். இதில் வெறும் ₹3,926 கோடி மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் தமிழகத்திற்கு மொத்த நிதியில் 10% வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 4.10% ஆக மிக மோசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்திற்கும் நிதி குறைக்கப்பட்டுள்ள அதே வேளையில், உத்தரப் பிரதேசம், பீகார், குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்குப் பன்மடங்கு நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்தத் தன்னிச்சையான போக்கைக் கண்டித்தும், வேலை உறுதித் திட்டத்தைப் பழையபடியே செயல்படுத்த வலியுறுத்தியும், கடந்த ஜனவரி மாதம் 23-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று நடைபெற உள்ள தமிழக அமைச்சரவை கூட்டத்தில், முதலமைச்சர் ஜோசப் விஜய் இப்பிரச்சனை குறித்து விவாதித்து, நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும்.

ஒன்றிய அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, வரும் ஜூன் 23-ஆம் தேதி தமிழகம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம். மாநில அரசும் இப்போராட்டத்தின் கோரிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்திய குடிமக்கள் மற்றும் வயது வந்த அனைவரும் அமைப்புகள் அல்லது அரசியல் கட்சிகளைத் தொடங்குவதற்கு முழு உரிமை உண்டு. அதுபோல யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால், அது யாருக்காகத் தொடங்கப்படுகிறது, யாருடைய பினாமியாக தொடங்கப்படுகிறது என்பது போகப் போகத்தான் தெரியும் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.