தேசிய அளவிலான இளைஞர் விழாவில் மத்திய அரசால் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும் 15 வயது முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்களுக்கும், தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கும் தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2019-20-ம் ஆண்டில் செய்த இளைஞர் நலப்பணிகளுக்காக இந்த விருதுகள் நடப்பு நிதியாண்டில் வழங்கப்பட உள்ளது.
இந்த விருதை பெற திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருது பெற விரும்பும் இளைஞர்கள் சமூக பணியாற்றி இருக்க வேண்டும். மத்திய அரசு, மாநில அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்க இயலாது. விருதுக்கு விண்ணப்பிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் பதிவு துறை சட்டம் 1860-ன்படி கடந்த 3 ஆண்டுகளுக்கு அமைப்பு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும்.
நிர்வாக குழுவின் அதிகாரங்கள் அமைப்பு விதிகளில் குறிப்பிட்டிருக்க வேண்டும். சமூக நலன் சார்ந்த திட்டங்களை அறிவார்ந்த தன்மையுடன் மேம்படுத்த தன்னார்வத்துடன் ஈடுபடும் தகுதியை பெற்றிருக்க வேண்டும். எந்தவித லாப நோக்கத்துடனும் தொண்டு பணிகள் செய்திருக்க கூடாது. குறிப்பிட்ட சாதி, மத அடிப்படையில் தொண்டாற்றிய அமைப்புகள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விருது பெற தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் பதக்கம், தொண்டு நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் ரொக்க பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்படும். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க வருகிற 17-ந் தேதி கடைசி நாள் ஆகும். தகுதியுடையவர்கள் http://innovate.mygov.in/national-youth-award-2020என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.