திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா
நேற்று மாலை 6.21 மணிக்கு அவிட்டம் நட்சத்திரம் 2-ம் பாதம் மகர ராசியில் இருந்து அவிட்டம் நட்சத்திரம் 3-ம் பாதம் கும்ப ராசிக்கு குரு பிரவேசித்தார். இதைத் தொடர்ந்து, தலை எழுத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை படைத்த ஸ்தலம் என்று போற்றப்படும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து 5 மணிக்கு பிரம்மா, தட்சிணாமூர்த்தி மற்றும் நவக்கிரகத்திற்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 6.21 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
மேலும், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்தும் வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சோ.மனோகரன் செயல்அலுவலர் வீ.முத்துராஜ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். இதேபோல் மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாத சாமி கோவிலிலும் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி பயபக்தியுடன் சாமியை வணங்கினர்.