மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டுகொள்ளவில்லை; சாலை மறியலில் குதித்த பொதுமக்கள்
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிகுட்பட்ட சிதம்பரத்தான்பட்டி பகுதியில் மழை காலங்களில் அந்த பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதும் அவற்றில் கொசுக்கள் உருவாகி மக்கள் தொற்று நோய்களுக்கு ஆட்படுவதும் தொடர்ந்து நீடித்துக் கொண்டே தான் இருக்கின்றது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் அந்த பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது. இதுமட்டுமின்றி அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் திண்டுக்கல் சாலை ரெயில்வே மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மணப்பாறை பகுதிக்கு ஆய்வு மேற்கொள்ள வந்த கலெக்டர் உள்பட யாரும் வராமல் புறக்கணித்து விட்டதாக குற்றம் சாட்டினர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காண வழிவகை செய்யப்படும் என்று கூறியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர்.