குற்ற சம்பவங்களை தடுக்க விழிப்புணர்வு அணிவகுப்பு
திருச்சி கண்டோன்மெண்ட் சரகத்திற்குட்பட்ட கண்டோன்மெண்ட் சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையம், குற்றப்பிரிவு போலீஸ் நிலையம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையம், செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையம் ஆகியவற்றில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார் என 60-க்கும் மேற்பட்டவர்கள் அணிவகுப்பு நடத்தினர்.
இந்த அணிவகுப்புக்கு கண்டோன்மெண்ட் சரக போலீஸ் உதவி கமிஷனர் அஜய் தங்கம் தலைமை தாங்கி வழிநடத்தினார். அணிவகுப்பு வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் தொடங்கி, வ.உ.சி.சாலை, மத்திய பஸ் நிலையம், காவேரி ஆஸ்பத்திரி வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தை அணிவகுப்பு சென்றடைந்தது.
மேலும் அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள்,ரோந்து வாகனங்கள் வந்த போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஜங்ஷன் மேம்பாலம் அருகே இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சோதனை செய்தனர். இதில் சந்தேகத்திற்கிடமாக இருக்கும் நபர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டி வரும் வாகனங்களை பறிமுதல் செய்தனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநகரில் தொடர்ந்து அதிரடி சோதனை நடைபெறும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.