மண்ணச்சநல்லூரில் உழவர் பெருந்திரள் கூட்டம்
திருச்சி, ஜூன் 2 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை யின் சார்பாக மாதவ பெருமாள் கோவில் கிராமத்தில் கிசான் கோஸ்தி என்னும் உழவர் பெருந்திரள் கூட்டம்மற்றும் உழவரைத் தேடி வேளாண்மை- உழவர் நலத்துறை நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையேற்று விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் பயிற்சி நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராணி வரவேற்று பேசி ஒருங்கிணைந்த பண்ணையம், அங்கக பண்ணையத்தின் அவசியம் பற்றி கூறி துறை திட்டங்களை எடுத்துரைத்தார்.
திருச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் திருமதி வசந்தா உழவர் பெருந்திரள் கூட்டத்தின் விவசாயிகள் விழிப்புணர்வு நடைப்பயணத்தை துவக்கி வைத்து, ஒருங்கிணைந்த பண்ணையத்தால், விவசாயிகள் எந்தவித இழப்பும் இன்றி வருமானம் பெறலாம் எனவும், பயிர்,காய்கறிகள், கால்நடைகள், கோழி, மீன் வளர்ப்பு பட்டுப்புழு வளர்ப்பு தேனீ வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு அசோலா வளர்ப்பு, தீவனம், மர பயிர்கள் வளர்ப்பு ஆகியவற்றை ஒரே பண்ணையத்தில் செய்யும் பொழுது ஒன்றுக்கு ஒன்று உறுதுணையாக அமைவதுடன், அதிக செலவுகள் இன்றி ஒரு குடும்பத்திற்கு வேண்டிய அனைத்தும் ரசாயன உரங்களோ, பூச்சிக்கொல்லிகளோ அல்லது நச்சு உள்ள பொருட்களின்றி தரமான உணவுப் பொருட்கள் கிடைக்கும் என்று பேசினார்.
விதையாய்வு துணை இயக்குநர் கண்ணன் பேசுகையில், நமக்கு வேண்டிய தரமான விதைகளை நமது பண்ணையிலேயே உற்பத்தி செய்து செலவினை குறைக்கலாம் எனவும், உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குநர் ராஜசேகரன் செயல் விளக்கங்கள், பண்ணை பள்ளி பயிற்சிகள், பட்டறிவு பயணங்களை எடுத்துக் கூறி அட்மா திட்டங்களை பற்றி விளக்கி கூறினார்.
உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் புவனேஸ்வரி உழவன் செயலி மற்றும் அதனுடைய பயன்கள் பற்றி எடுத்துக் கூறினார். வேளாண்மை அலுவலர் தேசிங்கு ராஜன் மண் மாதிரி எடுத்தல், மண் மற்றும் நீரை பகுப்பாய்வு செய்து விவசாயிகள் பயிர் செய்ய வேண்டுமெனவும், கூட்டத்தில், உயிர் உரங்கள், எதிரி உயிரிகள், நுண்ணு ட்டங்கள், பல்வேறு தொழில்நுட்ப பதாகைகள், அதிக மகசூல் தரவல்ல புதிய வகை காய்கறிகள், மலர்கள், நுண்ணீர் பாசன கருவிகள் ஆகியவற்றை காட்சிப்படுத்தி, மண்ணச்சநல்லூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் திவ்யா மற்றும் அலுவலர்கள், நித்யா,அகிலா,உஷா துணை வேளாண்மை அலுவலர் மருத துரை, உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆனந்த், கதிரேசன்,கோபி, பார்த்திபன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கூட்டத்தில் வேளாண் துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்கள், 100க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வட்டார தொழில் நுட்ப மேலாளர் அன்பழகன் நன்றி கூறினார்