மணப்பாறையில் திமுக சார்பில் அகில இந்திய அளவிலான மாபெரும் கபாடி போட்டி
மணப்பாறையில் திமுக சார்பில் அகில இந்திய அளவிலான மாபெரும் கபாடி போட்டி துவங்கியது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திமுக திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் நடைபெறும் ஐம்பெரும் விழாவை முன்னிட்டு அகில இந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபாடி போட்டி தொடர்ந்து நான்கு நாட்கள் இரவு பகல் ஆட்டங்களாக நடைபெற உள்ளது. மணப்பாறை ஒன்றிய திமுகவின் சார்பில் தியாகேசர் ஆலை மைதானத்தில் நடைபெறும் இந்த கபடி போட்டி சற்றுமுன் துவங்கியது. வாணவேடிக்கையுடன் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அமிர்தவள்ளி, தலைமை ஆசிரியர் அருளரசன் ஆகியோரால் புறாக்கள் பறக்கவிடப்பட்டு போட்டி துவக்கிவைக்கப்பட்டது. முதல் போட்டியை மணப்பாறை ஒன்றிய செயலாளர் ராமசாமி, நகர செயலாளர் மு.மு செல்வம் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.
இந்த போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் அணிக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சம் முதல் பரிசாகவும், ரூ.1,50,000 இரண்டாம் பரிசாகவும், தலா ரூ. 1,00,000 முன்று மற்றும் நான்காம் பரிசாகவும், பெண்கள் பிரிவிற்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிவாக ரூ.75 ஆயிரமும், முன்று மற்றும் நான்காம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.
வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் திமுக தெற்கு மாவட்ட ஐம்பெரும் விழாவில் கட்சியின் இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகையை வழங்க உள்ளார்.

இதில் தமிழ்நாடு, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மஹாராஸ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் விளையாட உள்ளனர்.
இதில் வையம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சீரங்கன், வழக்கறிஞர் கிருஷ்ணகோபால், மருங்காபுரி ஒன்றிய குழு தலைவர் பழணியான்டி, வையம்பட்டி ஒன்றிய குழு தலைவர் குணசீலன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான கபாடி ரசிகர்கள் போட்டியை கண்டுகளித்து வருகின்றனர்.