தொட்டியத்தில் விவசாயிடம் 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது
திருச்சி, ஜூலை 2 தொட்டியத்தில் விவசாயிடம் 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்து நடவடிக்கை
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் விவசாயிடம் ரூ 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு திருமாறன் இளையநம்பி என்பவர் உதவி செயற்பொறியாளராக பதவி வகிக்கிறார். இந்நிலையில் தொட்டியம் அருகே உள்ள கவரப்பட்டியில் வசிக்கும் விவசாயி தங்கராசு என்பவரிடம் உதவி செயற்பொறியாளர் திருமாறன் இளையநம்பி போர்வெல் மின் இணைப்பை நீ தவறாக பயன்படுத்துகிறாய் எனவே விசாரணை செய்ய வேண்டும் நேரில் வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து விவசாயி தங்கராசு செயற்பொறியாளர் திருமாறன்இளையநம்பியை நேரில் வந்து சந்தித்தபோது போர்வெல் மோட்டார் இயக்குவதில் முறைகேடு செய்து மின்சாரத்தை திருடி இருக்கிறாய் உனது மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமானால் ரூ.2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத தங்கராசு திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். பின்னர் போலீசாரின் அறிவுரையின்படி விவசாயி தங்கராசு தொட்டியத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் திருமாறன் இளையநம்பியிடம் ரூ. 2 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் லஞ்சம் வாங்கிய திருமாறன் இளையநம்பியை கையும் களவுமாக பிடித்து கைது செய்து லஞ்ச பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து திருமாறன் இளைய நம்பியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.