காட்டூரில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
காட்டூரில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முத்துசாமி ஆகியோர் பங்கேற்பு
திருச்சி, அக்.16 முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் காட்டூர் பகுதி கழகத்தின் சார்பாக நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காட்டூர் பகுதி கழக செயலாளர் நீலமேகம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் தமிழக வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சரும் ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேசுகையில், காட்டூர் பகுதி கழக செயலாளர் நீலமேகம் தனது சிறிய வயது முதல் இன்றைய காலம் வரை கழகத்திற்காக சுழன்று உழைத்து வருகிறார் என்றும் ஆகவே அவர் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் கையால் சிறந்த பகுதி செயலாளர் மற்றும் சிறந்த மாநகராட்சி கவுன்சிலர் என்ற விருதை பெற்றமைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சிறப்பான கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள பகுதி செயலாளர் மற்றும் வட்ட செயலாளர்களுக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். காட்டூர் பகுதியில் நடைபெறும் கலைஞரின் முப்பெரும் விழா கூட்டத்திற்கு யாரை அழைக்க வேண்டும் என்ற போது தமிழ்நாடு அமைச்சரவையில் ஒரு திட்டமிடலோடு ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று இளைய அரசியல்வாதிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்க கூடியவர் யார் என்று கூறினால் முத்துசாமியை தான் அழைக்க வேண்டும் என்று இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அவரை அழைத்து உள்ளதாகவும் அவர் வருகை புரிந்தமைக்கு தெற்குமாவட்ட கழகம் சார்பில் அவரை வரவேற்பதில் பெருமை கொள்வதாகவும் கூறினார்
மாநாடாக இருந்தாலும் சரி ஒரு பொதுகூட்டமாக இருந்தாலும் சரி அமைச்சர் முத்துசாமி சிறப்பாக செய்து காட்டுவார் என்பதற்கு ஈரோடு இடைத்தேர்தலே எடுத்துக்காட்டு என்றும் கூறினார். கலைஞர் நூற்றாண்டு விழாவில் ஒரு சிறிய நினைவூட்டலை கூற விரும்புவதாகவும் 1938 ஆம் ஆண்டு கலைஞர் தனது பள்ளிகள் இரண்டாம் படிவம் திருவாரூரில் படித்து வரும் பொழுது ராஜாஜி அவர்கள் இந்தியை கட்டாயம் திணிக்கும் திட்டத்தை கொண்டு வந்த பொழுது தனது 14 வயதில் அங்குள்ள மாணவர்களை ஒன்றாக திரட்டி இந்தி எதிர்ப்புகென ஒரு படிவத்தை தயார் செய்து அனைவரிடமும் வழங்கிக் கொண்டிருந்தார் கலைஞர் அப்பொழுது பள்ளியின் இந்தி ஆசிரியர் வந்து கொண்டிருந்த பொழுது அவரிடமும் அந்த படிவத்தை வழங்கியிருந்தார் அதை வாங்கிக் கொண்ட இந்தி ஆசிரியர் மறுநாள் பள்ளியில் உள்ள எழுத்து பலகையில் இந்தியில் எழுதி கலைஞரை இதை படி என்று கூறிய போது கலைஞர் அதைப் படிக்க மறுத்துவிட்டார். உடனடியாக அந்த இந்தி ஆசிரியர் கலைஞரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதை மனதில் வைத்துக் கொண்ட கலைஞர் பின்பு தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்றவுடன் திருவாரூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார் அப்பொழுது கலைஞரின் கன்னத்தில் அறைந்த அந்த ஆசிரியர் ஒரு சித்த வைத்திய சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த அந்த ஆசிரியர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களை பொதுப்பணித்துறை அமைச்சர் என்று வரவேற்ற பொழுது கலைஞர் தனது கன்னத்தை தடவி அந்த ஆசிரியருக்கு நினைவூட்டினார் எனவே கலைஞர் அவர்கள் அறிஞர் அண்ணாவின் வழியில் ஆங்கிலத்தையும் தமிழையும் தூக்கிப் பிடித்த ஒரு தலைவர் என்றால் அது கலைஞர் தான் என்றும் கூறினார் மேலும் இன்றைய தமிழக முதல்வர் மகளுக்காக பல்வேறு திட்டங்களை செய்து வருவதாகவும் எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாடும் நமதே நாற்பதும் நமதே அனைத்து தொகுதிகளிலும் வென்று முதல்வரின் கரத்தை வலுப்பெற வேண்டும் எனவும் கூறினார்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி பேசுகையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதில் நான் பெருமைப்படுவதாகவும் கூறினார். திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான மகேஸ் பொய்யாமொழி தனது முதல் பட்ஜெட் கூட்ட தொடரிலேயே எந்த ஒரு குறிப்பு இல்லாமல் தனது திட்டத்தை பற்றி விரிவாக எடுத்துரைத்தது அனைத்து அமைச்சர்களுக்கும் வியப்பாக இருந்தது. பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழ்நாடு முதல்வர் சரியான நபரை தான் தேர்ந்தெடுத்ததாகவும் நாங்கள் பெருமை கொண்டுள்ளோம் என்றும் கூறினார்.
முத்தமிழ் அறிஞர் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக மக்களுக்காக வழங்கி உள்ளதாகவும் அதை பின்பற்றி தற்போது உள்ள தமிழக முதல்வர் மகளிருக்காக பல்வேறு நலத்திட்டங்களையும் ஏழை எளியவர்களுக்கு உதவும் மனப்பான்மையுள்ள முதல்வராக வாழ்ந்து வருவதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் முதல்வரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் அதற்கு நாம் முழுமையாக உழைக்க வேண்டும் என எடுத்துரைத்தார்.
மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் மாநகர செயலாளர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன் துணை மேயர் திவ்யா மாவட்ட துணை செயலாளர்கள் செங்குட்டுவன், லிலாவேலு மூக்கன் சந்திரமோகன் பகுதி கழகச் செயலாளர் தர்மராஜ் சிவா ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன் உட்பட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.