திருச்சி தோட்டக்கலை துணை இயக்குனர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திருச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 4,200 எக்டர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. மரவள்ளி பயிரில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல்துறை வல்லுநர்கள் ஆலோசனைபடி, திருச்சி மாவட்ட தோட்டக்கலைத்துறையினரால் அறிவுரை வழங்கி உள்ளனா். அதன்படி, மாவு பூச்சி தாக்குதலுக்குள்ளான செடிகளின் நுனிக்குருத்தை அகற்ற வேண்டும்.

தாக்குதலுக்குள்ளாகி காய்ந்த செடிகளை அழிக்க வேண்டும். மண்ணில் ஈரப்பதம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வேப்பம் புண்ணாக்கு பயன்பாட்டினை அதிகரிக்க வேண்டும். மேலும், வயலில் எறும்புகள் நடமாட்டத்தை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இயற்கை முறையில் விவசாயம் செய்யும் நபர்கள், 5 மி.லி. அசாடிராக்டினை 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம் அல்லது 2 மி.லி. மீன் எண்ணெய் ரெசின் சோப்பினை 1 லிட்டர் நீரில் கலந்து பாதிப்பு ஏற்பட்ட ஆரம்ப காலங்களில் தெளிக்கலாம். செடிகளின் அனைத்து பகுதிகளிலும் வயல் வரப்புகளில் உள்ள களைச்செடிகள் மீதும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டும். பாதிப்படைந்த வயலில் இருந்து விதைக்கரணை தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.