விழிப்புணர்வு மாரத்தான் போட்டி….
மணப்பாறை அருகே மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய திருச்சி மாவட்ட எஸ்பி.
300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் 10 கிலோ மீட்டர் ஓடி சாதித்தனர். மூன்றாவது இடம்பிடித்த 14 வயது சிறுவன்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியில் ஜேசிஐ வையம்பட்டி டவுன் மற்றும் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மதுவை தவிர்ப்போம், மரத்தை நடுவோம், விதிகளை மதித்து விபத்தை தவிர்ப்போம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆர்.எஸ்.வையம்பட்டியில் துவங்கிய போட்டியை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவரும் மாரத்தானில் பங்கேற்று ஓடினார். வையம்பட்டி, நொச்சிமேடு, கருங்குளம், செக்கனம் வழியாக 10 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வையம்பட்டியில் காமாட்சியம்மன் கோயில் அருகே முடிவடைந்தது. வழிநெடுகிலும் பொதுமக்கள் கைதட்டி வீரர்களை உற்சாகப்படுத்தினர். போட்டியில் 300 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்.பி சுஜித்குமார் பரிசு வழங்கினார். திருச்சியைச் சேர்ந்த அரவிந்த் முதலாவதாகவும் மணப்பாறையைச் சேர்ந்த கௌதம் மற்றும் கிருபன் (வயது 14) ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாவதாக வந்து பரிசு பெற்றனர்.
