துவாக்குடி காவல்நிலையம் சார்பில் போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணி
திருச்சி, ஜூன் 23 துவாக்குடி காவல் நிலையம் சார்பில் போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது .
தமிழகஅரசு மற்றும் காவல்துறையினர் இணைந்து “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற மாபெரும் இயக்கத்தை முன்னெடுத்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் துவாக்குடி காவல் நிலையம் சார்பில் மாணவர்களிடையே போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் போதை பொருட்களால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து மாணவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் துவாக்குடி அரசு கலைக்கல்லூரியில் இன்று போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது .
இந்தப் பேரணியை திருவெறும்பூர் ஏ எஸ் பி அரவிந்த் பனாவத் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து பதாகையில் கையெழுத்திட்டார்.
தொடர்ந்து இந்த பேரணியானது துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வழியாக அண்ணா வளைவு, கடைவீதி, அக்பர் சாலை வரை சென்று நிறைவு பெற்றது.
பேரணியின் போது மாணவ மாணவிகள் கையில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷமிட்டு சென்றனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் துவாக்குடி காவல் ஆய்வாளர் தீபநாதன், உதவி ஆய்வாளர் நாகராஜ், துவாக்குடி அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.