பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
திருச்சி, ஜன.24 மணப்பாறையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி. தனியார் கல்லூரி மாணவிகள் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று முழக்கம்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனம் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் சிலையில் இருந்து கல்லூரி சேர்மன் உதயகுமார் தலைமையில் துவங்கிய பேரணியை மருத்துவர்கள் கலையரசன், அறிவழகன், சுரேஷ், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயா, 500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் பங்கேற்று பெண்குழந்தைகள் பாதுகாப்பு குறித்த முழக்கங்கள் எழுப்பினர்.
பேரணியானது கோவில்பட்டி சாலை, திருச்சி சாலை, பேருந்து நிலையம், பெரியார் சிலை வழியாக மதுரை சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் முடிவடைந்தது. நடன குதிரையுடன் நடந்த பேரணியானது சுமார் 3 கி.மீட்டர் தூரம் வரை நடைபெற்ற நிலையில் இறுதியில் காவல்துறை அதிகாரிகள் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறித்தும் அதில் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினர். இதில் கல்லூரி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் மணப்பாறை தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகளும் திரளாக பங்கேற்றனர்.