மணப்பாறையில் கட்சிக் கொடி அகற்றப்பட்டதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல்
திருச்சி, மார்ச் 2 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள பஸ் நிலையம் அருகே பெரியார் சிலை ரவுண்டானா பகுதியில் பாஜக சார்பில் பாஜக கொடி கட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் மதுரையில் என்.டி.ஏ. கூட்டணி பொதுக் கூட்ட அலங்கார வளையில் பெரியார் உருவப்படம் அகற்றப்பட்டதன் எதிரொலியாக மணப்பாறை பேருந்துநிலையம் அருகே பெரியார் சிலை பகுதியில் நிறுவப்பட்டிருந்து பா.ஜ.க கட்சி கொடிகளை அகற்ற திராவிடர் கழக நகரச் செயலாளர் ரமேஷ், வி.சி.க மாவட்ட பொருளாளர் மதனகோபால், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின ஒன்றிய செயலாளர் தங்கராசு, வழக்குரைஞர் சதாசிவம் உள்ளிட்டோர் கட்சி கொடியை அகற்ற முயன்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவர்களை தடுத்துநிறுத்தினர். அதைத் தொடர்ந்து நகராடசி நிர்வாகம் சார்பில் கட்சி கொடிகள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மணப்பாறையில் ரெயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்ற நிலையில் அதற்காக பாஜக சார்பில் கட்டப்பட்டிருந்த கட்சிக் கொடி அகற்றப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பாஜகவினர் ரவுன்டானா அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் கொடியை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நகராட்சி மற்றும் தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோசங்கள் எழுப்பினர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் மணப்பாறை டிஎஸ்பி காவியா தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பாஜவினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.