காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக -ஒன்றிய பா.ஜ.க அரசுகளை கண்டித்து முற்றுகை போராட்டம்
திருச்சி, அக்.11 தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசையும், ஒன்றிய பா.ஜ.க அரசையும் கண்டித்து தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், விவசாய சங்கங்கள் சார்பில் திருச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு, தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறந்து விட வலியுறுத்தியும், உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு பின் திறக்கப்படும் குறைந்த நீரைக்கூட தடுக்கும் கர்நாடக பாஜக மற்றும் கன்னட அமைப்புகளைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு, பலமுறை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியும் தமிழ்நாட்டு விவசாயிகளை பற்றி கவலைப்படாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் இன்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டம் முழுவதும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம், திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கடையடைப்பு நடைபெற்று வருகிறது. மேலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிடும் போரட்டம் அறிவிக்கப்பட்டிருந்து மேலும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் தலைமை தபால் நிலையம் அருகிலுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் மாநகராட்சி மேயர் அன அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவா, மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா, மனிதநேய மக்கள் கட்சி ராஜாமுகமது, அஷ்ரப், தமிழ்நாடு விவசாய சங்கம், மாவட்டத் தலைவர், அயிலை சிவசூரியன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் செழியன், சமூக நீதிப் பேரவையில் நிர்வாகி ரவிக்குமார் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சியில் இருந்து கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.