திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் காவல்துறையினர் தீவிர விசாரணை
திருச்சி, ஜன. 17 திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று மதியம் சுமார் 1.45 மணிக்கு திருச்சி விமான நிலைய முனைய மேலாளர் அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. பணியில் இருந்த அலுவலர் போனை எடுத்து பேசியபோது, எதிர்முனையில் பேசிய நபர், திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்துவிட்டு உடனடியாக தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அலுவலர், இது பற்றி உடனடியாக முனைய மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் மூலம் சோதனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பினை பலப்படுத்தினர். மதியம் 2 மணியளவில் தொடங்கிய சோதனை மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த சோதனையின் முடிவில் அங்கு வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தொலைபேசியில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விமான நிலைய காவல்துறையினர் மற்றும் விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த தொலைபேசி அழைப்பு வெளிநாட்டு எண்ணில் இருந்தோ அல்லது இணையதளம் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.