குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி…
திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து மாவட்ட, மாநகர காவல் துறையினருக்கான போக்சோ சட்டம் 2012 நடைமுறைகள் குறித்து காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் குழந்தை நல காவல் அலுவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி திருச்சியில் நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தஸ்தகிர் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் திறன் வளர்ப்பு பயிற்சியை தொடங்கி வைத்து முன்னிலையுரையாற்றினார்.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் சிறப்புரை ஆற்றினார்.
மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு வாழ்த்துரை வழங்கினார்.
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு நிறுவனம் சாரா பாதுகாப்பு அலுவலர் முத்துமாணிக்கம் வரவேற்றார். சமூக பணியாளர் பிரியங்கா நன்றி கூறினார். பயிற்சியில் திருச்சி மாநகர, மாவட்ட காவல்துறை காவல் அலுவலர்கள் 60க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சியினை சென்னை துளிர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வித்யா ரெட்டி, திட்ட மேலாளர் நான்சிதாமஸ், சன்னுதி சுரேஷ் ஆகியோர் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 காவல்துறையினருக்கான நடைமுறைகள், நடைமுறைப்படுத்துவதற்கான இடையூறுகளை களைவதற்கான வழிகாட்டுதல்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள், பாலியல் குற்றத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மறுவாழ்வில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, குழந்தை நலக்குழு வுடன் இணைந்து குழந்தைகள் நலனில் காவலர்களின் பங்கு குறித்து பயிற்சி அளித்தனர். பயிற்சியில் மாவட்ட குழந்தை நல குழு தலைவர் மோகன், உறுப்பினர்கள் சியாமளா, பவுலின் நேத்தலிக் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் ஸ்ரீவித்யா, நிறுவனம் சார்ந்த பாதுகாப்பு அலுவலர் ஜெயசித்ரா, சமூக பணியாளர் பிரியதர்ஷினி, புறத் தொடர்பு பணியாளர்கள் கிருத்திகா, கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.