வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேர் மீது வழக்கு
திருச்சி, மே. 22 திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா, நெய்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் ராஜா (வயது 38). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மதுபாலன் (44) என்பவரும் நண்பர்கள் ஆவர். மதுபாலன் சமயபுரத்தில் தையல் கடை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரவீன் ராஜா தனது துணிகளைத் தைப்பதற்காக சில துணிப் பொருட்களையும், அதற்கான தையல் கூலியாக ரூ.1,000-த்தையும் மதுபாலனிடம் கொடுத்துள்ளார். ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும் மதுபாலன் துணிகளைத் தைத்துக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று பிரவீன் ராஜா நெய்குளத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மதுபாலனிடம் தனது துணிகளைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மதுபாலன் மற்றும் அவருடன் வந்த தளபதி (21), ரிஷிகாந்த் (22), தினேஷ் குமார் (23), ரியாஸ் (20) ஆகிய 5 பேரும் சேர்ந்து பிரவீன் ராஜாவை அசிங்கமாகத் திட்டி, கைகளாலும், அரிவாளாலும் கொடூரமாகத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த அவர் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். இதுகுறித்து பிரவீன் ராஜா அளித்த புகாரின் பேரில், சிறுகனூர் போலீசார் மதுபாலன் உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.