தாய், மகனை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு
திருச்சி, ஜன.31 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே முத்துராஜபாளையத்தில் முன் விரோதத்தில் தாய் மகன் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமயபுரம் அருகே முத்துராஜபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சசிகுமார் (42). அதே பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மனைவி கீர்த்தனா. கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவேந்திரன் அப்பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் உண்டியலை உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சசிகுமாருக்கும் தேவேந்திரனுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி இரவு 9 மணி அளவில் தனது வீட்டு முன்பு சசிகுமார் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தேவேந்திரன் அவரது மனைவி கீர்த்தனா மற்றும் லட்சுமணன் ஆகியோர் சசிகுமாரை அரிவாள் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட அவரது தாய் விஜயா தடுக்க வந்துள்ளார். அப்போது அவர் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரும் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து சசிகுமார் சமயபுரம் காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் தேவேந்திரன், லட்சுமணன் கீர்த்தனா ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.