வீடு புகுந்து தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு: இரண்டு பேர் கைது
திருச்சி, மே 13 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் சிறுவயலூர் ஏரி கரையில் அடுக்கி வைக்கப்பட்ட மரக்கட்டையில் தண்ணீர் ஊற்றியதில் ஏற்பட்ட தகராறில் வீடு புகுந்து தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு . இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் சிறுவயலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் காசிராஜன் (49).அதேபோல் புள்ளம்பாடி அருகே காணக்கிளிய நல்லூர் காலனி தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (37), மோகன்(38) பாலசுப்பிரமணியன் (38), சிவக்குமார் (38).இவர்கள் அங்குள்ள சில மரங்களை வெட்டி சிறுவயலூரில் உள்ள ஏரிக்கரையில் மரக்கட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர்.
இந்த மரக்கட்டைகள் மீது காசிராஜன் ஏரியில் உள்ள தண்ணீரை ஊற்றியதாக கூறப்படுகிறது.இதை எதிர் தரப்பினர் கேள்வி கேட்டுள்ளனர். அப்போது காசிராஜனுக்கும் எதிர் தரப்பை சேர்ந்தவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார்,மோகன், பாலசுப்பிரமணியன், சிவக்குமார் ஆகியோர் காசிராஜன் வீட்டில் புகுந்து அரிவாள் மற்றும் கையால் தாக்கியதாக கூறப்படுகிறது .இதில் காசிராஜன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி (48) அரியலூர் மாவட்டம் பளிங்காந்த்தத்தை சேர்ந்த ஐயப்பன் (35) ஆகியோர் காயமடைந்தனர். இதில் காசிராஜன் மற்றும் சாந்தி இருவரும் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐயப்பன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து கணக்கிளியநல்லூர் காவல் நிலையத்தில் காசிராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து பாலசுப்பிரமணி சிவகுமார் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர் . மற்ற இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.