மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலில் அக்னி சட்டி எடுத்த பக்தர்கள்
திருச்சி, மே 13 திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். அதேபோல் இந்த ஆண்டும் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 21 ம் தேதி பூச்சொரிதழ் விழாவுடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. புகழ்பெற்ற இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பால்குட விழா நேற்று காலை நடைபெற்றது. இந்நிலையில் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட பக்தி பரவசமூட்டும் நிகழ்ச்சிகள் இன்று காலை நடைபெற்றது. காளியம்மன், காட்டு முனியப்பன், பேருந்து நிலையம் அருகே உள்ள முனியப்பன் ஆலயங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிடும் வகையில் தரை தப்பட்டை முழங்க அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும் அம்மனை வழிபட்டனர். குழந்தை வரம் வேண்டுபவர்கள் கோவிலின் தல விருட்சமான வேப்பமரத்தில் தொட்டில் கட்டியும், வேண்டுதல் நிறைவேறியவர்கள் கரும்புத்தொட்டில் கட்டி எடுத்துவந்தும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் கோவில் முன்பு ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்தும் ஆடு, கோழி பலிகொடுத்தும் அம்மனை வழிபட்டனர். திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.