பட்டினப்பாக்கம் விவகாரத்தில் முதலமைச்சர் உரிய முடிவை எடுப்பார் : துரை வைகோ எம்.பி. பேட்டி

0 10
Stalin trichy visit

திருச்சி,செப்.12  பரந்தூர் விவகாரத்தை போல பட்டினப்பாக்கம் விவகாரத்திலும் முதலமைச்சர் உரிய நல்ல முடிவை எடுப்பார் என்ற முழு நம்பிக்கை உள்ளது – துரை வைகோ எம்பி பேட்டி.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி கே.கள்ளிக்குடி ஊராட்சியில், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்:-

அவசரகால சட்டம் மற்றும் மிசா என்பது ஒரு வரலாற்றுப் பிழை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸை எதிர்த்த திராவிட இயக்கங்கள், பொதுவுடமை இயக்கங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், சித்திரவதைகளை அனுபவித்தனர், பலர் உயிரிழந்தனர்.
அரசியல் காரணங்கள் மட்டுமின்றி, பொது அமைதிக்கு ஊறு விளைவித்தவர்கள் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களும் அன்று கைது செய்யப்பட்டனர். ஆனால், சில அரசியல் ஆளுமைகள் மீது அது புனையப்பட்டதாகவும் இருந்தது. திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரை, ஐயா வைகோதான் தமிழ்நாட்டில் மிசா சட்டத்தில் முதலில் கைதானவரும், கடைசியாக விடுதலையானவரும் ஆவார். இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அன்றைக்கே திருச்சியை இரண்டாவது தலைநகரமாகக் கொண்டு வருவது தமிழகத்திற்கு நல்லது என்று தீர்க்கதரிசியாக சொன்னார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விண்ணை முட்டும் ரியல் எஸ்டேட் விலையால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகரத்தின் ஒரு பகுதியை திருச்சிக்கு மாற்றுவது சென்னைக்கு மிகப்பெரிய பலம்.

திருச்சி இரண்டாவது தலைநகரமாக அறிவிக்கப்பட்டால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மத்திய மாவட்டங்கள் பெரும் வளர்ச்சியைப் பெறும். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி போன்ற தென்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளிக்க சென்னைக்குசெல்ல இரண்டு மூன்று நாட்கள் வரை செலவாகிறது. திருச்சியைக் கொண்டுவந்தால் தமிழ்நாட்டின் எந்த மூலையிலிருந்தும் 3 முதல் 4 மணி நேரத்தில் வந்துவிடலாம். திருச்சியில் போதுமான நிலங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை இணைப்புகள் உள்ளன. எனவே, இது சாதாரண ஜனங்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பாக இருக்கும்.

பட்டினப்பாக்கத்தில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் உள்ளது. மீனவர் குடியிருப்புகள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதிக்கும் என்பதால் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில், விவசாயிகளின் வாழ்வாதாரமும், நீர்நிலைகளும் பாதிக்கப்படும் என்பதால் மக்கள் எதிர்த்தபோது முதல்வர் அந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய உறுதுணையாக இருந்தார். அதேபோன்று, பட்டினப்பாக்கம் விவகாரத்திலும் முதலமைச்சர் உரிய நல்ல முடிவை எடுப்பார் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.

தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா குறித்த கேள்விக்கு?.. அரசு கல்லூரிகளும், பள்ளிகளும்தான் நலிவதடைந்த விளிம்புநிலை மாணவர்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பாக விளங்குகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம், வெளிநாடுகளைப் போல தனியார் முதலீடுகளும் கல்வித்துறையில் அவசியமாகிறது. இதை எதிர்ப்பவர்களில் பல கல்வித் தந்தைகளும், அரசியல் கட்சியினரும் உள்ளனர். தாங்கள் நடத்தும் கல்லூரிகளுக்குப் பொருளாதார ரீதியில் போட்டி வந்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் அவர்கள் எதிர்க்கிறார்கள் என்று கருதுகிறேன். இருப்பினும், தனியார் பல்கலைக்கழகங்கள் வெறும் வணிக முதலீடுகளாக மட்டும் பார்க்கப்படாமல், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மாணவர்களுக்கும் போதிய இட ஒதுக்கீடு கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.