பேருந்து வசதி இல்லாததைக் கண்டித்து கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியல்
திருச்சி, ஆக.29- மணப்பாறை அருகே பஸ் வசதி இல்லாததை கண்டித்து கல்லூரி மாணவ- மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு அருகே அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 950-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரிக்கு செல்வதற்கு முறையான பஸ் வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லவேண்டிய நிலை உள்ளது.
எனவே கல்லூரி வரை பஸ் இயக்க வேண்டும் என்று மாணவ- மாணவிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவ – மாணவிகள், இந்ந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று மணப்பாறை – துவரங்குறிச்சி சாலையில் சமத்துவபுரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் வருகிற திங்கட்கிழமை முதல் கல்லூரி வரை பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனையடுத்து கல்லூரி மாணவ – மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது