அரசின் அறிவுசார் மையத்தில் பயின்று போட்டித் தேர்வில் பெற்றவர்களுக்கு பாராட்டு
திருச்சி, மார்ச் 18 அரசு நடத்தும் அறிவு சார் மையத்தில் பயின்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் வெற்றிபெற்று பணியாணை பெற்றுள்ள 4 இளைஞர்களை திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் பாராட்டினார்.
திருச்சியில் மாநகரில் பாலக்கரை மற்றும் குதுப்பா பள்ளம் பகுதிகளில் அமைந்துள்ள அறிவுசார் மையத்தில், தமிழக அரசு சார்பில் குடிமைப்பணி மற்றும் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சிகள் காணொலி காட்சி வாயிலாக இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த இரு அறிவுசார் மையங்களிலும் தினசரி சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இதில் 4 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர்களுக்கான பணியாணைகளைப் பெற்றுள்ளனர்.
குறிப்பாக பாலக்கரை அறிவுசார் மையத்தில் பயின்ற தா. பிரவீன்குமார், சு. அட்சயா இருவரும் பொது சுகாதாரத்துறையிலும், ஜி. கீர்த்தனா நீதித்துறையிலும், கீர்த்தி லட்சுமி ஊரக வளர்ச்சித்துறையிலும் பணிக்குச் சேர்ந்துள்ளனர். அரசு இலவசமாக வழங்கி வரும் பயிற்சிகளில் பங்கேற்று போட்டித் தேர்வுகளில் வென்று சாதனை படைத்துள்ள இளைஞர்கள் 4 பேரையும் மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மைய அலுவலகத்துக்கு அழைத்து பரிசுப் பொருள்களை வழங்கி பாராட்டினார். இது போன்ற அரசு பயிற்சி மையங்களில் இலவசமாக பயில்வோருக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்த பாராட்டு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.