தா.பேட்டையில் சமுதாய வளைகாப்பு விழா

0 123
Stalin trichy visit

 திருச்சி, பிப். 16 திருச்சி மாவட்டம், தா.பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து, 100 கர்ப்பிணி பெண்களுக்கு நலுங்கு வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினார். முன்னதாக, விழாவிற்கு வருகை தந்த கர்ப்பிணிகளுக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர்களுக்கு கைகளில் வளையல்களை அணிவித்து எம்.எல்.ஏ வாழ்த்து தெரிவித்தார்.
விழாவில் எம்.எல்.ஏ பேசுகையில் “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முழு வளர்ச்சி அடைய முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் முனைப்புடன் பாடுபட்டு வருகின்றனர்,” என்று பேசினார். விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பூ, பழங்கள் மற்றும் வளையல்கள் அடங்கிய சீர் வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் புளி சாதம், எலுமிச்சை சாதம் உள்ளிட்ட 5 வகை கலவை சாதங்களுடன் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க மாநில செயற்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், மாவட்டத் துணைச் செயலாளர் மயில்வாகனன், ஒன்றிய செயலாளர் பெரியசாமி, நகர செயலாளர் தக்காளி தங்கராசு, நிர்வாகிகள் பிரபாகரன், மகாமணி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக குழந்தைகள் நல வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா வரவேற்புரையாற்றினார்.. நிறைவாக  அங்கன்வாடி மையப் பணியாளர் புவனேஸ்வரி நன்றி கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.