பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு கலந்தாய்வு கூட்டம்
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் திருச்சி ஆயுதப்படை திருமாங்கல்ய திருமண மண்டபத்தில் 30.11.2022 நடைபெற்றது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமை தாங்கி கலந்தாய்வு கூட்டத்தினை தொடங்கி வைத்தார். மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நோக்க உரையாற்றி அனைவரையும் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு, மாவட்ட வரதட்சணை தடுப்பு குழு உறுப்பினர் வழக்கறிஞர் விஜயபாபு, மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி ஆகியோர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளான குடும்ப வன்முறை, வரதட்சனை தடுப்பு, பணித்தளத்தில் பெண்களுக்கான பாலியல் வன்கொடுமை குறித்தும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குழந்தை திருமணம் தடுப்பு, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்தும் மற்றும் பெண்கள்,குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்களான குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்,வரதட்சணை தடுப்புச் சட்டம், பணித்தளத்தில் வேலை செய்யும் பெண்களுக்கான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் ,பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து பேசினார்கள்.
மாநகர, மாவட்ட காவல் துறை குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர்கள் அஜிம் ,சிவராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் மற்றும் குடும்ப நல ஆலோசகர்கள் செய்திருந்தனர். சில்ட்ரன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் ராபின்சன் நன்றி கூறினார். கூட்டத்தில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் குழந்தை நல காவல் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.