மணப்பாறையில் வளர்ச்சித் திட்டப்பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, அக். 9 திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், கே.பெரியபட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத்திட்டத்தின் கீழ் ரூ.6.33 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், கே.பெரியபட்டி ஊராட்சி மரவனூர் அங்கன்வாடி மய்யத்தில் குழந்தைகளுக்கு கற்பிக்கப்படும் முன்பருவ கல்வி முறைகள், வழங்கப்படும் உணவுமுறைகள், எடை மற்றும் உயரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார். மேலும், கண்ணுடையான்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பொய்கைப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் பள்ளி வளாகம், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கணினி ஆய்வகத்தை பார்வையிட்டு, மணப்பாறை மற்றும் பொய்கைப்பட்டி சமூக நீதி பள்ளி மாணவ, மாணவிகள் விடுதியில் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து தயார் செய்யப்பட்ட உணவினை உட்கொண்டு அதன் தரத்தினை ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, கண்ணுடையான்பட்டி பகுதியில் மகளிர் திட்டம் சார்பில் சாய்ராம் சுயஉதவி குழுவினர்கள் மூலிகை நாப்கின் தயாரிக்கும் பணி, கலிங்கப்பட்டி ஊராட்சியில் சிறீ விநாயகா சுயஉதவிக் குழுவினர் முறுக்கு தயாரித்து விற்பனை செய்யும் அங்காடியும், பொய்கைபட்டி ஊராட்சியில், நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட பொருட்களின் விபரம், இருப்பு, எடை அளவிடும் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, எப்.கீழையூர் பகுதியில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தின் செயல்பாடுகள், மொண்டிபட்டி கிராமத்தில் உள்ள திறந்தவெளி கிணற்றை புனரமைக்கும் பணியின் ஒரு பகுதியாக கிணற்றை சுற்றி சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு ரூ.7.49 இலட்சம் மதிப்பீட்டு தொகை மானியமாக ரூ.2.50 இலட்சம் வழங்கப்படும் பணியினையும், மேலும், பன்னாங்கொம்பு பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறையின் கால்நடை மருந்தகம் கட்டுவதற்கான தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாய்வின் போது மணப்பாறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, சண்முகம், மணப்பாறை வருவாய் வட்டாட்சியர் சண்முகம், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் நித்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.