பிளஸ் 2 பொதுத் தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, மார்ச் 1 திருச்சி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. தமிழ்நாட்டில் மாநில கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. பொதுத்தேர்வு குளறுபடியின்றி முறையாக நடைபெற ஏதுவாக பல்வேறு முன்னேற்பாடுகள் தேர்வுத் துறையால் செய்யப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுக்காக மட்டும் 130 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மத்திய சிறை கைதிகளுக்காக சிறைவளாகத்தில் தனியாக மையம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 2 கல்வி மாவட்டங்களை சேர்ந்த 13,603 மாணவர்கள், 16,400 மாணவிகள் என்று 30,003 பேர் 12 ஆம் வகுப்பு தேர்வையும், 11 ஆம் வகுப்பு தேர்வை 15,211 மாணவர்கள், 17,102 மாணவிகள் என்று 32 313 பேரும் பிளஸ்-1 எழுத உள்ளனர். மேலும் திருச்சி மத்திய சிறையில் 11 ஆம் வகுப்பு தேர்வை 35 பேரும், 12 ஆம் வகுப்பு தேர்வை 9 பேரும் என்று 44 கைதிகள் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை கண்காணிக்கும் வகையில் 250பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். மேலும் 1300 ஆசிரியர்களும் இதற்காக கண்காணிக்கும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி கல்வி மாவட்டத்தில் இன்று காலை 10 மணிக்கு 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. வினாத்தாள் படிக்க முதல் 10 நிமிடங்கள் வழங்கப்பட்டது. முதல் நாள் தமிழ் தேர்வை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் தேர்வெழுதினார்கள். இந்நிலையில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.