சிறப்புக் குழந்தைகளுக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
திருச்சி, அக்.12 சிறப்புக் குழந்தைகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், திருச்சியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
திருச்சியில் உள்ள டக் அவுட் ஸ்போர்ட்ஸ் ஸ்ட்ரீட் விளையாட்டு மைதானத்தில், ஏபிசி மருத்துவமனைக்குப் பின்புறம் அக்.10-ம் தேதி காலை 8.30 மணிக்கு இப்போட்டி நடைபெற்றது. இதில் 8 சிறப்புப் பள்ளிகளைச் சேர்ந்த சிறப்பு மாணவர்களும், அவர்களுடன் இணைந்து விளையாடும் வீரர்களும் பங்கேற்றனர்.
ஸ்பாட்லைட் சாம்பியன்ஸ் லீக், பிளஸ்ஸிங்ஸ் ஸ்போர்ட்ஸ், ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் பாரத் தமிழ்நாடு – திருச்சி மற்றும் சீதா ராமலட்சுமி கல்லூரி ஆகிய அமைப்புகள் இணைந்து இப்போட்டியை ஒருங்கிணைத்தன.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒய்.பார்ட்லி மகேந்திரன், திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற மாணவர்களைப் பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியை ஜிஎல்எஃப் ஸ்பாட்லைட் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலரும் இயக்குநருமான டாக்டர் லிவிங்ஸ்டன் பிலிப், பிளஸ்ஸிங்ஸ் ஸ்போர்ட்ஸ் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் பாரத் தமிழ்நாடு துணைத் தலைவரும், திருச்சி மாவட்டத் தலைவருமான ஜான்சி பால் ராணி உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.
சிறப்புக் குழந்தைகளின் விளையாட்டுத் திறனை வெளிக்கொணரவும், அவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கவும் இப்போட்டி நடத்தப்பட்டது.