மணப்பாறையில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்
திருச்சி, செப்.4 தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு அறிவுறுத்தலின்பேரில், திருச்சி மத்திய மாவட்டம் மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கட்சியின் பொது உறுப்பினர்கள் கூட்டம் பொத்தமேட்டுபட்டி தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஏ.எஸ் ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஒன்றிய அவைத்தலைவர் பாண்டியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக திருச்சி மத்திய மாவட்டச்செயலாளர் க.வைரமணி, ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பழனியாண்டி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனைகளும், மணப்பாறை சட்டப்பேரவை தொகுதியில் திமுக ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்திய உட்கட்டமைப்புகள் குறித்து தகவல்களும் வழங்கப்பட்டது. கூட்டத்திற்கு ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சித்தாநத்தம், சமுத்திரம், கண்ணுடையான்பட்டி, கே.பெரியப்பட்டி, மொண்டிப்பட்டி, ஆ.கலிங்கப்பட்டி மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சிகளை சேர்ந்த கட்சி உறுப்பினர் ஆயிரக்கணக்கானோர் பங்கெற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் எஸ்.ஆனந்த் ஆரோக்கியசாமி, தகவல் தொழிற்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், கார்த்திக்குமார் ஒன்றிய குழு துணை சேர்மன் புவனேஸ்வரி ஆண்டாள் மணி ஆகியோர் செய்திருந்தனர்.