பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : அரசு மருத்துவர் போக்சோவில் கைது

0 451
Stalin trichy visit

திருச்சி, செப். 4  திருச்சி மாநகர பகுதியில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள சில மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக கிரேஸ் சகாயராணி பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சாம்சன். லால்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.
இவர், மாணவிகள் தங்கி படிக்கும் விடுதிக்கு அடிக்கடி சென்று அவர்களுக்கு மருத்துவம் பார்ப்பது போல கடந்த 6 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குழந்தைகள் உதவி மையம் 1098 என்ற எண்ணிற்கு புகார் வந்ததன் அடிப்படையில், திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் சாம்சன் மீது வழக்கு பதிவு செய்தும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் கிரேஸ் சகாயராணி மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து காலை முதல் காவல் நிலையத்தில் வைத்து 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர். இந்த தகவல் அறிந்து அங்கு வந்த பத்திரிக்கையாளர்களுக்கு போலீசார் எந்தவித தகவலையும் தர மறுத்தனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று  மாலை இருவருக்கும் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு இரவு 8.30 மணிக்குள் நீதிபதி இல்லத்தில் குற்றவாளிகளை ஆஜர் படுத்துவதாக இருந்தது.

குற்றம்சாட்டப்பட்ட சாம்சன் மருத்துவர் என்பதால் அவர் தனக்கு பிரஸர் உள்ளது, சர்க்கரை நோய் உள்ளது, நெஞ்சு வலிக்கிறது என பலவாறு கூறி சோதனைகளை தாமதப்படுத்தினார். சோதனைகள் நிறைவடைந்து அவர்கள் இரவு 9 மணியளவில் வெளியே அழைத்து வரப்பட்ட போது பத்திரிக்கையாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் கூடியதால் போலீசார் சாம்சனுக்கு மிகப்பெரிய துண்டு ஒன்றை தலையில் வைத்து அவரது முகத்தை மறைத்தும், கிரேஸ் சகாயராணியின் முகத்தை மூடியவாறு  அழைத்து வந்தனர்.

மருத்துவமனையில் இருந்த பொதுமக்கள் பலரும் 100 ரூபாய் திருடும் திருடனின் புகைப்படத்தை பத்திரிக்கையில் வெளியிடும் போலீசார் பாலியல் குற்றவாளிகளுக்கு இவ்வளவு பாதுகாப்புடன் முகத்தை மூடி அழைத்துச் செல்கின்றனரே என்றனர்.

குற்றம்சாட்டப்பட்டவர்களை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனத்தின் பின் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சென்றனர். பின்னர் நீதிமன்றத்திற்கு உள்ளே உள்ள மகிளா நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்த வந்த போது மணி 9 க்கு மேல் ஆனதாலும், மகிளா நீதிமன்ற நீதிபதி விடுமுறையில் இருப்பதாகவும் கூறினர். இவை அனைத்தையும் தொடர்ந்து  படம்பிடிக்க செய்தியாளர்கள் முயற்சி செய்தனர். இதனால் உதவி ஆணையர் ஜெயசீலன் செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விரட்டி ஏன் படம் எடுக்கும் முயற்சி செய்கிறீர்கள் என்று உதவி ஆணையர் கேட்டபோது நீங்கள் முகத்தை மூடி ஏன் இப்படி அலைக்கிறீர்கள் என்று கேட்டனர்.

இதனை தொடர்ந்து மீண்டும் திருச்சி நீதிமன்றத்தில் இருந்து தபால் நிலையம் சாலை, டிவிஎஸ் டோல்கேட்,பழைய பால் பண்ணை,காவிரி ஆறு , திருவானைக்காவல் செக் போஸ்ட், மாம்பழச்சாலை, காவிரி ஆறு பாலம் சத்திரம் பேருந்து நிலையம் வழியாக 20 கிலோமீட்டர் தூரம் குற்றவாளிகளை போலீஸ் வாகனத்தில் வைத்துக்கொண்டு ஆய்வாளர் நிர்மலா மற்றும் காவலர்கள் ஊரை சுற்றி காண்பித்து காந்தி சந்தை மார்க்கெட் நிலையத்திற்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் இருவரையும் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

இந்த 20 கிலோ மீட்டர் தூரமும் 10 க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர் தங்களது இருசக்கர வாகனத்தில் போலீஸ் வாகனத்தை துரத்தி சென்று படம் பிடித்தனர்

அப்போது போலீஸ் வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தகுற்றம்சாட்டப்பட்ட கிரேஸ் சகாயராணி பெண் காவலர் மடியில் படுத்து உறங்கி விட்டார்.காந்தி மார்க்கெட் காவல் நிலையம் வந்தடைந்தவுடன் போலீசார் அவரை எழுப்பி அழைத்து சென்றனர். நீதிமன்றத்தில் இருந்து காந்தி மார்க்கெட் காவல் நிலையம் 3 கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது காலை நீதிபதியிடம் ஆஜர்படுத்தப்படலாம் என காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

திருச்சி நீதிமன்றத்தில் இருந்து காந்தி மார்க்கெட் காவல் நிலையம் மூன்று கிலோமீட்டர் தூரம். அதற்கு 20 கிலோமீட்டர் தூரம் இரண்டு பேரையும் காவல்துறையினர் வாகனத்தில் வைத்தது இதற்கு காரணம் என்ன?

மகிளா  நீதிமன்றத்தில் எட்டு முப்பது மணி வரை நீதிபதி காத்திருந்த நிலையில் அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் முடிந்தும் தொடர்ந்து அங்கேயே 2மணி நேரம் காத்திருந்தனர்…

அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் போது காவல்துறையினரே குற்றவாளிக்கு பல்வேறு உதவிகளை செய்து செய்தியாளர்கள் அவரை புகைப்படம் எடுக்காத வண்ணம் தொடர்ந்து உதவிகரமாக செயல்பட்டது குற்றவாளிக்கு மிகுந்த ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவது போன்ற மிகப்பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது..

வழக்கு பதிவு செய்யப்பட்டது கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் பள்ளி இருக்கும் இடம் பாலக்கரை காவல் நிலைய எல்லை உட்பட்ட பகுதி என்பதால் அங்கு வைத்து விசாரணை மேற்கொண்டனர் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்ல் வைத்துள்ளனர்..

போக்சோ வழக்கில் கைதான அரசு மருத்துவரை இப்படி இன்று ஒரு நாள் முழுவதும் விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் சிறைகள் அடைக்காமல் இருப்பது குற்றவாளியை காப்பாற்றுகின்ற முயற்சியில் காவல்துறையினர் ஈடுபடுகிறார்களா என்ற சந்தேகத்தை அனைவருக்கும் ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.